Sunday, May 6, 2012

சென்னையில் வாட்டும் கத்திரி... வேலூர், நத்தம், கோபியில் சூறாவளியுடன் மழை


சென்னை: தமிழகத்தில் கத்தரி வெயில் சீசன் துவங்கியதையடுத்து நேற்று சென்னையில் 105 டிகிரி வெயில் அடித்துள்ளது. இன்று காலை முதல் லேசான மேக மூட்டமாக காணப்படுகிறது. அதேசமயம், வேலூர், நத்தம், கோபிச்செட்டிப்பாளையத்தில் சூறாவளிக் காற்றுடன் நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. வரும் 28ம் தேதி வரை கத்திரி வெயில் காலம் நீடிக்கும். கத்திரி வெயில் சுட்டெரிப்பதால் சென்னையில் தினமும் 100 டிகிரி வெப்பம் நிலவுகிறது. இதனால் மதிய வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.

வெப்பத்தை தணிக்க மக்கள் தர்பூசணி, இளநீர், பழச்சாறு, ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்கிறார்கள். இது தவிர ஏராளமானோர் நுங்கு, கிருணிப்பழம், வெள்ளரிக்காய் ஆகியற்றை வாங்கி உண்கிறார்கள். இதனால் பழம், பழச்சாறு, குளிர்பானக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு வியாபாரம் படுஜோராக நடக்கிறது.

பகல் எல்லாம் வெயில் கொளுத்துவதால் மாலையில் கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இளைஞர்கள் பலர் வெயிலில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களில் தஞ்சம் அடைகிறார்கள். காலையில் இருந்தே அனல் காற்று வீசுவதால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். இது தவிர மாநகரப் பேருந்துகளின் இருக்கைகள் சூடாகிவிடுவதால் மக்கள் அதில் அமர்ந்து பயணிக்க முடியாத நிலை உள்ளது. பேருந்துகளில் உள்ள கம்பிகள் கூட சுடுகிறது.

தலைநகர் சென்னை உள்பட பல பகுதிகளில் நல்ல வெயில் அடித்து வரும் நிலையில் சில பகுதிகளில் கோடை மழையும் பெய்தபடிதான் உள்ளது. வேலூர், நத்தம், கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளிக் காற்றுடன் பேய் மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர். பலத்த காற்று காரணமாக வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பைச் சந்தித்தன. வேலூரில் பல இடங்களில் மின் கம்பங்கள் கீழே விழுந்தன.

No comments:

Post a Comment