Tuesday, May 8, 2012

ஹஜ் யாத்ரீகர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

 Sc Strikes Down Haj Subsidy Be Eliminated 10 Years
டெல்லி: ஹஜ் பயணம் செய்யும் இஸ்லாமிய யாத்ரீகர்களுக்குத் தரப்படும் மானியத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மானியத்தை படிப்படியாகக் குறைத்து 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை முற்றிலும் நிறுத்துமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் அல்தமஸ் கபீர் மற்றும் ராஜன்னா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஆண்டுதோறும் ஹஜ் பயணத்துக்கு பிரதமரின் நல்லெண்ண தூதர்களாக அனுப்பப்படுவோரின் எண்ணிக்கையை 2 ஆகக் குறைக்குமாறும் நீதிபதிகள் கூறியுள்ளனர். பயணிகளுடன் நல்லெண்ணத் தூதர்கள் என்ற பெயரில் 10 பேர் போவது கூட தேவையில்லாதது, அந்த எண்ணிக்கையை 2 ஆகக் குறைக்க வேண்டும் என்றனர்.

மேலும் இந்திய ஹஜ் கமிட்டி எப்படி செயல்படுகிறது என்பதையும், ஹஜ் பயணத்துக்கு யாத்ரீகர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்யப் போவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

விஐபி கோட்டாவின் கீழ் ஆண்டுதோறும் ஹஜ் செல்லும் 11,000 பேரில் 800 பேருக்கான பயணத்தை தனியார் டூர் ஆபரேட்டர்கள் கையாள இந்திய வெளியுறவுத்துறை அனுமதிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் தான் மானியத்தையே ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் யாத்ரீகர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாகவும், இதை மாற்றி ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் பயணிகளுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மானியம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது. இதன்மூலம் இதுவரை ஹஜ் செல்லாதவர்களுக்கே முன்னுரிமை தர முடிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதே நேரத்தில் 2012ம் ஆண்டில் ஹஜ் பயணத்துக்கான மானியமாக எவ்வளவு செலவிடப்படவுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. பயணிகள் திரும்ப வந்த பின்னரே செலவு விவரம் முழுமையாகத் தெரியும் என மத்திய அரசு கூறியது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், மானியத்தையே படிப்படியாக ரத்து செய்யுமாறு தீர்ப்பளித்துள்ளனர்.

முஸ்லீம் எம்பிக்கள் வரவேற்பு:

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பல முஸ்லீம் எம்பிக்களும் வரவேற்றுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த மஜ்லீஸ் ஏ இத்திகதுல் முஸ்லீமீன் கட்சியின் தலைவர் அசாவுத்தீன் ஒவைசி நிருபர்களிடம் கூறுகையில்,

உண்மையில் ஆண்டுதோறும் மத்திய அரசு தரும் ஹஜ் மானியமான ரூ. 600 கோடி இஸ்லாமிய யாத்ரீகர்களுக்கு தரப்படுவதில்லை. மாறாக அது ஏர் இந்தியா நிறுவனத்துக்குத் தான் தரப்படுகிறது. யாத்ரீகர்களை ஹஜ் அழைத்துச் செல்ல ஏர் இந்தியாவுக்கு தரப்படும் பணத்தால் அந்த நிறுவனம் தான் பலனடைகிறது. மாறாக இந்தப் பணத்தை ஏழை முஸ்லீம்களின், குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்விக்கு செலவிடலாம் என்றார்.

காங்கிரஸ் எம்பி சைபுதீன் சோஸ் கூறுகையில், இந்த மானியம் தரப்படுவதை பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகளும் எதிர்க்கின்றன. இதனால், மானியம் தருவதை நிறுத்தலாம். ஹஜ் பயணத்துக்கு மானியம் தருவதே மதவிரோதமானது என்று இஸ்லாமிய உலமாக்கள் கூட கூறி வருகின்றனர்.

மேலும் ஏர் இந்தியாவும், செளதி ஏர்லைன்சும் மட்டும் தான் ஹஜ் கமிட்டி மூலமாக செல்லும் யாத்ரீகர்களை அழைத்துச் செல்லாம் என்ற விதியை தளர்த்த வேண்டும். இந்த விஷயத்தில் உலகளாவிய டெண்டர் கோரினால் பல விமான நிறுவனங்களும் போட்டி போடும். இதனால் கட்டணம் பெருமளவில் குறையும். இதனால் உச்ச நீதிமன்றம் சொல்வது போல 10 வருடங்கள் காலதாமதம் செய்யாமல் மானியத்தை உடனே மத்திய அரசு நிறுத்தலாம் என்றார்.

No comments:

Post a Comment