Thursday, May 3, 2012

தென்காசி மக்களைக் குளிர வைத்த தென்மேற்கு பருவக்காற்று


தென்காசி: தென்காசி பகுதியில் வசந்த காலமான தென்மேற்கு பருவக் காற்று காலம் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மின்வெட்டு கஷ்டத்தில் இருந்து சற்று மீண்டுள்ளனர். 
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்காசியில் நிலவும் சீசன் குற்றாலத்திற்கே உரிய சீசன் ஆகும். கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு பகுதியில் இது தென்மேற்கு பருவ மழைக்காலம் என்று கூறப்பட்டாலும் குற்றாலத்தில் மட்டுமே இது சாரலாகவும், தென்றல் காற்றாகவும், உடலுக்கும், மனதுக்கும் இதமளிக்கிறது. 

தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னோடியாக தென்மேற்கு பருவக்காற்று வீசும். இது தென்காசி, குற்றாலம் பகுதியி்ன் வசந்தகாலம் ஆகும். சீசனுக்கு அடுத்தபடியாக தென்மேற்கு பருவக்காற்றும் குற்றாலம் பகுதியில் ஒரு சிறப்பம்சம். தமிழகத்தின் பிற பகுதிகள் வெயிலின் கோர பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில் தென்காசி, குற்றாலம் பகுதி மக்களுக்கு கத்தரி வெயில் என்றால் என்னவென்றே தெரியாது. 

இந்த ஆண்டின் வசந்த காலம் நேற்று தொடங்கியது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களை வாட்டி வந்த வெயிலின் தாக்கம் முற்றிலும் நீங்கியது. தென்மேற்கு பருவக் காற்று துவங்கியதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாக தென்காசி பகுதி மக்களை வாட்டி வந்த மின்வெட்டில் இருந்தும் சற்று விடுதலை கிடைத்துள்ளது. 

No comments:

Post a Comment