குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானதாக கூறப்பட்டவர் திடீரென திரும்பி வந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், அரசு கொடுத்த நிவாரண நிதியை அரசிடமே திருப்பிக் கொடுத்தனர்.
காடியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் விபுல் படேல். 36 வயதான இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போனார். அந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 57 பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவரது உடல் மட்டும் அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து அந்த உடல் விபுல் படேல்தான் என்ற முடிவுக்கு அவரது குடும்பத்தினர் வந்தனர். 55 நாட்கள் கழித்து விபுல் படேல்தான் அது என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
இதையடுத்து விபுல் படேல் குடும்பத்துக்கு இழப்பீட்டுநிதியாக மாநில அரசு ரூ. 5 லட்சம் கொடுத்தது. இந்த நிலையில நான்கு ஆண்டுகள் கழித்து திடீரென விபுல் படேல் தனது வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்து முதலில் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தங்களுக்கு அரசு வழங்கிய ரூ. 5 லட்சம் நிதியைத் திருப்பித் தருவதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதினர். மேலும் விபுல் படேலின் அண்ணன் முகேஷ், மாவட்ட கலெக்டர் விஜய் நேஹ்ராவை நேரில் சந்தித்து பணத்தைத் திருப்பித் தந்தார்.
இதுகுறித்து கலெக்டர் நேஹ்ரா கூறுகையில், இறந்து போனதாக கருதப்பட்டவர் திரும்பி வந்திருப்பது மகிழ்சி தருகிறது. அதை விட பெரும் மகிழ்ச்சி அளித்தது என்னவென்றால், அரசு கொடுத்த பணத்தை தாங்களாகவே முன்வந்து திருப்பி அளித்த படேல் குடும்பத்தினரின் நேர்மைதான். இது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.
தற்போது விபுல் படேல் இறந்து விட்டார் என்பதற்காக வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை ரத்து செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் தற்போது மேற்கொண்டுள்ளது.
மேலும் விபுல் படேல் திரும்பி வந்துள்ளதால், அவர் என்று அடையாளம் காணப்பட்ட பிணம் யாருடையது என்ற சிக்கல் குஜராத் அரசுக்கு தற்போது எழுந்துள்ளது.
No comments:
Post a Comment