ஓரளவு வசதியான வீடுதான். ரஹீம்: அவன் மனைவி ஆயிஷா: மற்றும் அவனது வயதான தாய் மர்யம்:. இந்த மூன்று பேரையும் சேர்த்து ஆயிஷாவின் வயிற்றில் வளரும் ஆறு மாத குழந்தை. இந்த நான்கு பேர் வசதியாக வாழ இந்த வீடு போதும்தான். ரஹீமுக்கு திருமண மாகி 6 வருடங்கள் ஆகி விட்டது. இந்த வருடம் தான் அவனது மனைவி உண்டாகி இருப்பது அவனுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் மகிழ்ச்சி: மறுபுறம் அவனது தாயார் ஒரு வாரம் முன்பு வாத நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கால் ஒரு கை விளங்காமல் போன சோகம். டாக்டரும் கையை விரித்து விட்டார். இனி படுக்கையில்தான் தனது வாழ்நாளை தனது தாயார் கழிக்க வேண்டுமாம். சிந்தனை வயப்பட்டவனாக தனது மளிகை கடையை திறக்க ரஹீம் சென்று கொண்டிருந்தான்.
ஆயிஷா தனது மாமியாருக்கு மருந்துகளை கலக்கி கொடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாகி விட்டது. மாமியாரின் துணிகளையும் மாற்றியாக வேண்டும். தனது கணவன் வருவதற்குள் மதிய உணவையும் தயார் பண்ண வேண்டும்: என்று எண்ணியபடியே வேலைகளில் மும்முரமானாள் ஆயிஷா. 'ஆயிஷா..கொஞ்சம் இங்கே வாம்மா..' மாமியாரின் குரல் கேட்டு அடுப்பங்கரையிலிருந்து ஹாலுக்கு வந்தாள் ஆயிஷா. ஆயிஷாவின் முகத்தை பார்ப்பதற்கே வெட்கப்பட்டுக் கொண்டு தனது முகத்தை திருப்பிக் கொண்டார் மர்யம். நிலைமையை புரிந்து கொண்ட ஆயிஷா மாமியாரின் உடைகளை மாற்ற ஆயத்தமானாள். ஆம்...படுக்கையையே கழிவறையாக்கிய மாமியாரை பரிதாபமாக பார்த்துக் கொண்டே அவரை தூக்கி சுவற்றோடு சாய வைத்தாள். உடுத்திய துணிகள், விரிப்பு அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்து துவைக்க போட்டாள் ஆயிஷா.. தனது மருமகள் தனக்காக செய்யும் அனைத்து வேலைகளையும் நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தார் மர்யம்....
வாளியில் உள்ள தண்ணீரில் டவளை நனைத்து தனது மாமியாரின் உடல் முழுக்க துடைத்து விட்டாள் ஆயிஷா. துவட்டி முடிந்தவுடன் புதிய துணிகளை எடுத்து மர்யமுக்கு அணிவிக்கும் பொழுது மரியமின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொல வென்று கொட்ட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் இதை கவனித்த ஆயிஷா 'என்ன மாமி...ஏன் அழுகுறீங்க....உடல் ஏதும் வலிக்கிறதா?' என்று கேட்டாள்.
'இது உடல் வலி இல்லம்மா..மனசு வலி...நான் முன்பு உங்க குடும்பத்துக்கு செய்த கொடுமைகளை நினைத்து பார்த்தேன். அழுகை வந்து விட்டது'
'அட...அது எப்பவோ நடந்த கதை..அதற்கென்ன இப்போ...கவலைபடாமல் தூங்குங்க..'
'இல்லம்மா...உன் கல்யாண நேரத்துல நான் கேட்ட 20 பவுன் வரதட்சணையினால தானே உன் வீட்டை உன் அப்பா விற்கும் நிலைக்கு ஆளானது. அந்த கவலையிலேயே உன் அப்பாவும் ஒரு வருடம் முன்பு இறக்கவில்லையா....அதற்கெல்லாம் காரணம் நான்தானேம்மா'
'அப்படீன்னு நான் நினைக்கல்ல மாமி...இறைவன் என் அப்பாவை அழைக்கும் நேரத்தில் அழைத்துக் கொண்டான். நான் உங்களை குறை சொல்லவில்லை.'
'அது உன் பெருந்தன்மையை காட்டுதும்மா!...என் மகனும் வரதட்சணை வாங்காதேன்னு பல தடவை படிச்சு படிச்சு சொன்னான். இந்த பாவி மனுஷி யார் பேச்சையும் கேட்காமல் பெட்ரூம் செட், 20 பவுன் நகை, விருந்து செலவு என்று ஏகத்துக்கும் உங்க அப்பாவை கொடுமை படுத்திட்டேம்மா…..அவர் இப்போ உயிரோட இல்லே ...அதனால நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன் ஆயிஷா... என்னை மன்னிப்பாயா...' மர்யமின் குரல் சன்னமாகி விம்மத் தொடங்கினார்.
'என்ன மாமி! சின்ன பிள்ளை மாதிரி அழுகிறீங்க...இப்போ இருக்கிற நிலைமையிலே நீங்க டென்ஷன் ஆனா அது உங்க உடம்பை மேலும் பாதிக்கும். பேசாம தூங்குங்க..'
'எப்படிம்மா தூக்கம் வரும். இறைவன் தனக்கு செய்த பாவங்களையாவது மன்னித்து விடுவதாகவும் மனிதர்களுக்கு செய்த பாவத்தை அந்த மனிதன் மன்னிக்காத வரையில் நான் மன்னிக்க மாட்டேன் என்று இறைவன் கூறுவதை நீ படிக்கவில்லையா...எனக்கோ இறப்பு நெருங்கிக் கொண்டு வருகிறது. என் மனது அமைதியின்றி தவிக்கிறது. மன்னிக்க வேண்டிய உன் தகப்பனாரும் உயிரோடு இல்லை...நான் என்ன செய்வேன் இறைவா...நான் என்ன செய்வேன் இறைவா...' என்று முனகிக் கொண்டே மர்யம் தூங்கிப் போனார்.
தனது மாமியாரை பரிதாபத்தோடு பார்க்கத் தொடங்கினாள் ஆயிஷா..பழைய நினைவுகள் எல்லாம் கண் முன் நிழலாடியது...திருமணத்தில் தனது மாமியார் ஆடிய ஆட்டமும், தனது தகப்பனாரிடம் திருமண நாளன்று பேசிய தொகைக்கு அதிகமாகவே வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதும் வேறு வழி இன்றி வட்டிக்கு பணத்தை வாங்கி திருமணத்தை முடித்ததும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள் ஆயிஷா. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் இருந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டில் சில காலம் வசித்து வந்ததையும் சொந்த வீடு போன ஏக்கத்தில் சில நாட்களுக்குப் பிறகு மாரடைப்பு வந்து இறந்த செய்தியும் ஞாபகத்துக்கு வரவே ஆயிஷாவின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு வழிந்தோடி தரையை தொட்டது…..
எனது மாமியார் ஏன் இப்படி நடந்து கொண்டார்? இவர்களிடம் சொத்து இல்லையா? சாப்பாட்டுக்கு சிரமப்பட்டவர்களா? எதுவும் இல்லை. இறைவன் கொடுத்த வசதியான வீடு. தினமும் பல ஆயிரங்களை கொட்டிக் கொடுக்கும் மளிகைக்கடை. ஒரே ஆண் வாரிசு. பரம்பரை சொத்து: இவ்வளவு இருந்தும் பாழாய்ப் போன இந்த வரதட்சணையை அவசியம் கேட்டுத்தான் இருக்க வேண்டுமா! அதுவும் கல்யாண நேரத்தில் ஈவு இரக்கமின்றி அப்படி பேசி எனது தகப்பனாரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கத்தான் வேண்டுமா...இன்று அந்த பணம் எங்கே! கழிவறைக்கு போகக் கூட முடியாமல் தினம் செத்து பிழைக்கிறார்களே! இவர்கள்' படும் கஷ்டம் என் மாமியார் சொன்னது போல் எனது தகப்பனாரின் வயிறெரிந்து கேட்ட பிரார்த்தனைகளோ. அப்படி இருந்தால் இறைவா! தற்போது எனது மாமியார் தவறை உணர்ந்து விட்டார். என் பொருட்டும் என் தகப்பனாரின் பொருட்டும் எனது மாமியாரை பிழை பொறுத்தருள்வாயாக! என்று மனதுக்குள் கூறிக் கொண்டு மதிய தொழுகைக்காக கை கால்களை கழுவ பாத்ரூமுக்குள் சென்றாள் ஆயிஷா...
நன்றி:சுவனபிரியன்
நன்றி:சுவனபிரியன்
No comments:
Post a Comment