Wednesday, May 16, 2012

கடும் மின் தட்டுப்பாட்டில் மக்கள்.. அதிமுக அரசின் ஓராண்டு சாதனைக்கு ரூ.25 கோடியில் விளம்பரம்!

 With Rs 25 Cr Jaya Breaks Record For One Day Advt Spend
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு நிறைவு விழா விளம்பரங்களுக்காக மட்டும் அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஓராண்டு நிறைவு விழாவையொட்டி அதிமுக அரசு நாட்டின் அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பெரிய விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் இந்த விளம்பரங்களுக்காக மட்டும் அதிமுக அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த விளம்பரத்தின் விவரம் வருமாறு,

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்- இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

இதுதான் என்னுடைய இலட்சியம்!
-செல்வி ஜெ. ஜெயலலிதா
தமிழக முதல்வர்

என்று விளம்பரம் துவங்குகிறது.

இதையடுத்து, மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் துரித நடவடிக்கைகளால் செயலற்றுக்கிடந்த தமிழகம் மீண்டும் புதுப்பொலிவுடன் புத்தெழுச்சி பெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிமுக அரசின் சாதனைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

பசியாறி மகிழ விலையில்லா அரிசி,

பெண்களுக்குத் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்,

மகளிர் மனம்குளிர விலையில்லா மிக்சி,

கிரைண்டர், மின்விசிறி, எளியோர் ஏற்றம் பெற விலையில்லா கறவை மாடுகள்/ஆடுகள்,

மாணவ, மாணவியர் கல்வியில் சிறக்க விலையில்லா மடிக்கணினி,

சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள்,

தரமான மருத்துவ சேவைக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓராண்டு சாதனைகளை விளம்பரப்படுத்த ஒரே நாளில் ரூ.25 கோடி செலவு செய்திருப்பதும் ஒரு சாதனை தானே!

No comments:

Post a Comment