Tuesday, May 8, 2012

கேரள முதல்வர் தமிழர்களை இளிச்சவாயர்களாக நினைக்கிறார்: உதயகுமார் தாக்கு


நெல்லை: கேரளாவில் அணு மின் நிலையம் அமைக்க அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தயாராக இருக்கிறாரா என்று கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழு மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது கட்டமாக கடந்த 1ம் தேதி முதல் போராட்டக்குழுவினர் 24 பேர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினர். 7வது நாளான நேற்று 302 பெண்கள் உள்பட 376 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களில் 15 பெண்கள் மயங்கினர். அவர்கள் இடிந்தகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்ற முதல்வர் அறிவிப்பை அடுத்து போராட்டக்குழுவினர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். 

அப்போது போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசுகையில், 

நமது உயிரை பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. காற்றாலை மூலம் கூடுதலாக மின்சாரம் தயாரிக்க முடியும என அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்தி வைக்குமாறு அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. மின்வெட்டை காரணம் காட்டி கூடங்குளம அணு உலையை திறப்பதே அதன் நோக்கம். 

கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூடங்குளத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 500 மெகாவாட் கேட்கிறார். உண்மையில் அவர்களது சட்டப்பூர்வ பங்கு 266 மெகாவாட் மட்டுமே. ஆனால் அவர் அதை விட கூடுதலாகக் கேட்கிறார். கேரள மாநிலத்தில் அணு மின் நிலையத்தை நிறுவ முதல்வர் உம்மன்சாண்டி தயாராக இருக்கிறாரா?. அங்கு மட்டும் அணு மின் நிலையம் அமைக்க உம்மன்சாண்டி அனுமதி அளிக்கட்டும், அவரை கேரள மக்கள் ஓட ஓட விரட்டி விடுவார்கள். தமிழர்களை இளி்ச்சவாயர்களாக உம்மன்சாண்டி நினைக்கிறார் என்றார்.

No comments:

Post a Comment