Thursday, May 3, 2012

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஹமீத் அன்சாரிக்கு எதிர்ப்பு- சுஷ்மாவுக்கு சமாஜ்வாதி கடும் கண்டனம்


டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஹமீத் அன்சாரியை முன்நிறுத்த பாரதிய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அவர்களது மதவாதப் பார்வையையே வெளிப்படுத்துகிறது என்று சமாஜ்வாதி கட்சி சாடியுள்ளது.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. மோகன்சிங் கூறியுள்ளதாவது:

நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் நிற்க வேண்டும் என்பதை பாஜக தீர்மானிக்கக் கூடாது. குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்து சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்த கருத்துகள் மதச்சார்பின்மை சீர்குலைக்கும் மதவாத சிந்தனையின் வெளிப்பாடே.

பாரதிய ஜனதா முன் நிறுத்தக் கூடிய வேட்பாளரை சமாஜ்வாதி ஆதரிக்காது. இருப்பினும் இது தொடர்பாக உரிய நேரத்தில் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் முடிவெடுப்பார் என்றார் அவர்.

முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அன்சாரியையோ அல்லது பிரணாப்பையோ காங்கிரஸ் முன் நிறுத்தினால் பாஜக ஆதரிக்காது என்றும் காங்கிரஸ் கட்சி அல்லாத ஒருவரையே பாஜக ஆதரிக்கும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார்.

இது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்துக்குள்ளேயே கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

No comments:

Post a Comment