Thursday, May 3, 2012

படு வேகத்தி்ல் பாய்ந்து வரும் காற்றாலை மின்சாரம்-கரண்ட் 'கட்' வெகுவாக ரத்து!


tamilnadu wind power decreases power cut tamil nadu சென்னை: தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில்மின் வெட்டு வெகுவாக குறைந்திருந்தது. சில இடங்களில் முழுமையாகவே மின்வெட்டு ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏன் இப்படி என்று மக்களுக்குப் பெரும் குழப்பம். ஆனால், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் அபரிமிதமாக வருவதால்தான் மின்வெட்டு பெருமளவில் குறைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்திலிருந்து கடும் மின்வெட்டு மக்களை வாட்டி வருகிறது. இதைச் சொல்லியே ஆட்சிக்கு வந்தது அதிமுக. ஆனால் அவர்கள் வந்த பிறகுதான் மின்வெட்டு மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் - சென்னையைத் தவிர்த்து- பாதி நாட்கள் கரண்ட் கிடையாது என்ற நிலைதான். பெரும்பாலான பகுதிகள் எப்போதும் இருளில் மூழ்கியேக் கிடந்தன.

இந்த நிலையில் சென்னையிலும் 2 மணி நேர மின்வெட்டை அரசு அமல்படுத்தியது. தற்போது மின்வெட்டு பெருமளவில் குறையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம், காற்றாலை மின்சாரம் பெருமளவில் கிடைப்பதுதான்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றலை மூலம் மின் உற்பத்தி 1,580 மெகா வாட்டாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. காற்றாலை மின் உற்பத்தி 1,998 மெகாவாட்டாக உயர்ந்தது. இதில், 30.788 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகர்வோர்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று மின்வெட்டு இல்லை.

இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் கூறுகையில்,

நேற்று முன்தினத்தை விட நேற்று காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. எனவே, நேற்று காற்றாலை மூலம் மின் உற்பத்தி கூடுதலாக கிடைத்தது. தொடர்ந்து அதிகமாக காற்று வீசினால் நமக்கு முழு அளவு மின்சாரம் காற்றாலைகள் மூலமாக பெறமுடியும்.

தொடர்ச்சியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெற முடிந்தால் தமிழ்நாட்டுக்கு மீண்டும் சீரான மின்சாரம் கிடைக்கும். இதுபோல் தினமும் வாயுபகவான் கருணை காட்டினால் சீரான மின்சாரத்தை பெறமுடியும் என்று நம்புகிறோம் என்றார்.

உற்பத்தியை குறைக்கச் சொல்லும் அரசு?:

ஆனால் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாகப் பெற முடியாத நிலையில் மி்ன்வாரியம் உள்ளதாம். அதிக அளவில் மின்சாரத்தை எங்களால் பெற முடியாத நிலை உள்ளது. மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது. எனவே உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மின்வாரியத்திடமிருந்து காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்குக் கோரிக்கை போயுள்ளதாம்.

இது இப்படி இருக்க நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு பெரிதாக இல்லை. பல மணி நேரம் மின்சாரம் போகும் பகுதிகளில் சில மணி நேரம் மட்டுமே கரண்ட் இல்லை. சென்னையைப் பொறுத்தவரை பல இடங்களில் மின்வெட்டு இல்லை. சில இடங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே கரண்ட் கட் ஆனது. ஆனால் நேற்று மே தினம் என்பதால் தமிழகத்தில் அத்தனை தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால்தான் பெரிய அளவில் மின்சாரம் நேற்று செலவாகவில்லை. இதுவும் நேற்று மின்வெட்டு வெகுவாக குறைய ஒரு காரணம்.

No comments:

Post a Comment