Sunday, January 1, 2012

கிறிஸ்தவர் மீது தாக்குதல் - ஜும்ஆ பிரசங்கத்தில் யூசுப் அல் கர்ழாவி கண்டனம்


நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவரான டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள உமர்பின் கத்தாப் மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய அவர் கூறியதாவது,

நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கதும், இஸ்லாத்தின் உயர்வான கொள்கைகளுக்கு எதிரானதுமாகும். இத்தகைய தாக்குதல்களை நடத்துவது இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு கடுமையான குற்றமாகும். இதர மதத்தவர்களின் வழிப்பாட்டுத் தலங்களை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும். நமது அரசியல் சட்ட அமைப்பில் இதர மதத்தவர்களும் எல்லாவித உரிமைகளுக்கும் தகுதி உடையோர் ஆவர்.

அரபு வசந்தம் வெற்றிப் பெற்ற துனீசியாவில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. எகிப்தில் கட்டம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் பயமின்றி வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வது அபிமானத்திற்கு உரியது ஆகும். முஸ்லிம், கிறிஸ்தவ, லிபரல், செக்குலர் என வேறுபாடு இன்றி அனைத்து பிரிவினரும் நன்மையின் புது யுகம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். எகிப்தின் மிலிட்டரி கவுன்சில் மக்களின் நிம்மதியான வாழ்க்கையை உறுதிச் செய்து, ராணுவத்திற்கான பொறுப்புகளை மட்டும் நிறைவேற்ற வேண்டும்.

பரிசுத்த திருக்குர்ஆனை மனனம் செய்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொண்ட நாடுதான் லிபியா என்பது, அண்மையில் நான் லிபியாவுக்கு சென்றபொழுது புரிந்துக்கொண்டேன். இத்தகைய மகத்தான பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்களான லிபியாவின் சாதாரண மக்கள் ஆயுதங்களை அரசு அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். அமைதியும், நிம்மதியும் அமுலில் வருவதற்கான ஒரு அமைப்பிற்காக லிபியாவின் லட்சக்கணக்கான மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மூன்று நாடுகளை தொடர்ந்து சிரியாவிலும், யெமனிலும் புரட்சிகள் வெற்றிப்பெறும். மக்களை நேரில் சந்தித்து சிரியாவில் நடக்கும் காரியங்களை உண்மையாக பதிவுசெய்ய அரபுலீக்கின் கண்காணிப்புக்குழு நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு கர்ழாவி கூறினார்.

No comments:

Post a Comment