Thursday, January 12, 2012

அமெரிக்காவின் முஸ்லிம் சித்திரவதை முகாமுக்கு வயது 10


கியூபாவில் உள்ள குவாண்டநாமோ குடாவில் இருக்கும் அமெரிக்க தடுப்பு முகாமுக்கு முதலாவது கைதி ஒருவர் கொண்டுவரப்பட்டு 10 வருடம் பூர்த்தியாகின்றன. இந்த தடுப்பு முகாமில் மிகவும் அதிகமாக 800 பேர்வரை ஒரே நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இப்போது அங்கு 170 க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், அதிபர் ஒபாமா அவர்கள் தான் பதவிக்கு வந்தால் ஒரு வருடத்துக்குள் அந்த தடுப்பு முகாமை மூடுவேன் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார். அதனைச்செய்ய தாம் திடசங்கற்பம் பூண்டிருப்பதாக அவர் இன்னமும் கூறிவருகின்ற போதிலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பத்து வருடங்களுக்கு முன்னதாக திறக்கப்பட்ட காலம் முதல் குவாண்டநாமோ குடா முகாம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.ஆரங்சு நிறத்தில் உடையணிந்து, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் முதலாவது கைதியின் படங்கள் வெளியாகியிருந்த காலம் முதல் அவையும் விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றன.

ஆரம்ப கட்ட முகாமான ''காம்ப் எக்ஸ் ரே'' நீண்டகாலத்துக்குப் பின்னர் மூடப்பட்டது. ஆனால், அது குறித்த சர்ச்சை நிச்சயமாக இன்னமும் முடியவில்லை.அந்த முகாமின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இண்டர்நாஷனல் கருத்துக் கூறுகையில், ''மனித உரிமைகள் தொடர்பில் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த முன்மாதிரியை இந்த முகாம் ஏற்படுத்தியுள்ளது'' என்று கூறியுள்ளது.தாம் அந்த முகாமை மூடப்போவதாக ஒபாமா அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற போதிலும், அந்த முகாமை மூடுவதற்கான முயற்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஸ்திரமற்ற நிலையிலேயே காணப்படுகின்றன.

ஜெனிவா ஒப்பந்தத்தின் மூலமோ அல்லது அமெரிக்கச் சட்டங்களின் மூலமோ பாதுகாப்பைப் பெற முடியாத எதிரிகளையே இந்த முகாமில் தடுத்து வைத்ததாக புஷ் நிர்வாகம் கூறிவந்தது. இதற்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், உண்மையில் அங்கு கைதிகள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டார்கள். கால்வாசி இரணுவம் சார்ந்த தீர்ப்பாயங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் வந்தன.

அத்துடன் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கைதிகள் மீதான துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்ரவதைகள் ஆகியவை குறித்த சர்ச்சையில் குவாண்டநாமோ குடா மாட்டியிருந்தது.பொதுமக்கள் உறவு மற்றும் அந்தஸ்து ஆகியவற்றுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கு ஈடு செய்யக் கூடிய அளவுக்கு இந்த முகாம் மூலம் பாதுகாப்புத் துறைக்கு பலன்கள் கிடைக்கிறதா இல்லையா என்பது குறித்தும் இந்த முகாமின் ஆதரவாளர்கள் மற்றும் எதிராளிகள் மத்தியில் வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன.

பெரும்பாலான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டார்கள்.ஆனால், இன்னமும் மீதமிருக்கின்ற கைதிகளை என்ன செய்வது என்பது குறித்து நடந்துகொண்டிருக்கின்ற பாதுகாப்பு, சட்ட மற்றும் அரசியல் இழுபறிகளுக்கு மத்தியில், அந்த முகாமை முற்றாக மூடுவேன் என்ற தனது வாக்குறுதியை ஒபாமாவால் இதுவரை நிறைவேற்ற முடியவில்லை.

No comments:

Post a Comment