Friday, January 20, 2012

தமிழ்நாடு: புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்க உயர்நீதிமன்றம் தடை !


New Assemblyசென்னை: புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அது கிடைக்கும் வரை அப்பணிகளைத் தொடங்கக் கூடாது என்று கூறி புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் பிரமாண்டமான அளவில் பல நூறு கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் புதிய சட்டசபையை கடந்த திமுக ஆட்சி கட்டியது. அங்கு சட்டசபையும் இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டமும் நடத்தப்பட்டது.



இந்த நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகத்தையும், சட்டசபையையும் மூட உத்தரவிட்டு விட்டது. சட்டசபையும், தலைமைச் செயலகமும் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே நீடிக்கிறது.

மேலும், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும், அங்கு அதி உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதுதொடர்பான பணிகளையும் அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வீரமணி என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முருகேசன், ஜனார்த்தன ராஜா முன்னிலையி்ல் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில்,

புதிய தலைமைச் செயலகத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கு முன்பு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் மருத்துவமனை அமைக்க கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கப்படுமா என்பது குறித்து இன்றைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர்.

அதன்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் மருத்துவமனையாக புதிய தலைமைச் செயலகத்தை மாற்ற முடியாது. சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். அதுவரை மருத்துவமனையாக மாற்றும் பணிகளைத் தொடங்கக் கூடாது என்று கூறி நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.

முன்னதாக புதிய சட்டசபை கட்டிடத்தின் 'ஏ' பிளாக்கில மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், 'பி' பிளாக்கில் மருத்துவக் கல்லூரியும் துவங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 97,829 சதுர மீட்டர் பரப்பளவில் 8 மாடிகள் கொண்ட 'ஏ' பிளாக்கில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தரைத்தளத்தில் புறநோயாளிகள் பிரிவும், முதல் மாடியில் இதயம், நரம்பியல், நோய் கட்டிகள் தொடர்பான சிறப்பு பிரிவுகளும், 2வது மாடியில் ரத்த சுத்திகரிப்பு மற்றும் ஆய்வகங்களும், 3வது மற்றும் 4வது மாடிகளில் பொது வார்டுகள் அமைக்கப்படவுள்ளன. மேலும் 5 மற்றும் 6வது மாடிகளில் சிறப்பு வார்டுகள் உருவாக்கப்படுகின்றது. பொதுமக்கள் பார்வையிட வசதியாக அமைக்கப்பட்ட 2 மாடிகளின் தென்கிழக்குப் பகுதியில் ஆபரேஷன் தியேட்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர இங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்படவிருக்கின்றன.

மக்கள் வசதிக்காக லிப்ட் மற்றும் சிறப்பு பாதைகள் அமைக்கப்படவிருக்கின்றது. ரூ.26.9 கோடி செலவில் முதல் கட்ட சீரமைப்பு மற்றும் மின் அமைப்பு பணிகள் துவங்கப்படவிருக்கின்றது. இந்த சீரமைப்பு பணிகள் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் பல்வேறு பணிகள் டெண்டர் விடப்பட்டு முடிவு செய்யப்படுகிறது. இது குறித்த விவரங்களை வரும் 24 மற்றும் 25 தேதி தேதிகளில் நடக்கும் கூட்டத்தில் டெண்டரில் பங்கேற்பவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது தடை வந்து விட்டது.


1 comment:

Anonymous said...

தலைமை செயலகத்திருக்கு வந்த தலைவலி, மக்களின் வரி பணம் வீண் ஆகாமல் இருந்தால் சந்தோசம்!

நலம் விரும்பி!!

Post a Comment