Wednesday, January 11, 2012

ஒபாமா மனைவியின் நடத்தையால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கோபம்.



வெள்ளை மாளிகையில் அதிகாரிகளை ஆட்டி படைக்கிறார் ஒபாமா மனைவி மிஷெல் என்று அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் எளிமையானவராகவும், பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராகவும் இருப்பார். ஆனால், அவரது இன்னொரு முகத்தை பலரும் அறிய மாட்டார்கள்... அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் அதிகாரிகளை கேட்டால், அந்த முகத்தை தெரிந்து கொள்ளலாம்...


 இப்படி ஆரம்பித்து அவரை பற்றியும், ஒபாமாவை பற்றியும் பல்வேறு தகவல்களை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜோடி கன்டார். இன்று வெளியாகவுள்ள ‘தி ஒபாமாஸ்’ என்ற அந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை பெற்று, ஏ.பி. நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ளது. அதில், மிஷெல் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராக இருந்தாலும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆட்டி படைக்கிறார் என்று கூறி, சில சம்பவங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி இம்மானுவேல், அதிபரின் முன்னாள் ஆலோசகர் ராபர்ட் கிப்ஸ் ஆகியோருடன் மிஷெல் மோதிய சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். கடந்த ஆண்டில் மருத்துவ காப்பீடு திட்ட மசோதாவை ஒபாமா கொண்டு வந்த போது, அதற்கு எதிர்ப்பான கருத்துகள் வெளியாயின. அந்த திட்டக் கொள்கைகளை சரியாக கவனிக்கவில்லை என்று இம்மானுவேலிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார் மிஷெல். இதனால், மனம் நொந்த இம்மானுவேல் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், அதை ஒபாமா ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு சமயம், ‘அதிபரின் உதவியாளர்கள் யாருமே சரியில்லை. வெள்ளை மாளிகையில் புது டீம் கொண்டு வர வேண்டும்’ என்று மிஷெல் திட்டியிருக்கிறார்.

ஒரு முறை பிரான்ஸ் அதிபரின் மனைவி கர்லா புருனி சர்கோஸ் வந்த போது, அவரிடம் மிஷெல், ‘வெள்ளை மாளிகையில் வேலை பார்ப்பவர்கள் யாரும் சரியில்லை. இங்கு வசிப்பது நரகம் போல் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். இதனால், கிப்ஸ் கடும் கோபமடைந்திருக்கிறார். இது போல் பல சம்பவங்களை குறிப்பிட்டுள்ள நிருபர் கண்டார், இது பற்றி ஒபாமா மற்றும் மிஷெலிடம் கருத்து கேட்ட போது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர். இந்நிலையில், புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சாதாரணமாக நடந்த விஷயங்களை மிகைப்படுத்தியும், கற்பனைகளை சேர்த்தும் எழுதியுள்ளார்’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment