Sunday, January 29, 2012

தமிழ்நாடு: ஒரே இடத்தில் அனைத்து அரசு சேவைகள் !


ஒரே இடத்தில் அனைத்து அரசு சேவைகளையும் பெறுவதற்கு வசதியாக மக்கள் தொடர்பு மையம் தொடங்க தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தொழில்நுட்பத் துறையில் நாளுக்கு நாள் ஏற்படுகின்ற மாற்றங்களை, அன்றாட அரசு நடைமுறைகளில் புகுத்தி, அதன் மூலம் அரசுத்துறையின் பணிகளை எளிதாக்கி அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை நாடி அரசு என்கின்ற நிலையினை உருவாக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



அதன் அடிப்படையில், மக்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்கவும், மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்தவும், பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த சேவைகளை ஒரே இடத்தில் குடிமக்களுக்கு வழங்கவும், ரூ.6 கோடி ரூபாய் செலவில் மக்கள் தொடர்பு மையம் ஒன்றினை அமைப்பதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார்.



இந்த மையத்தின் மூலம், மக்கள் குறை தீர்ப்பு பற்றிய விவரங்கள், அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்கள், அரசு அலுவலகங்களின் தொடர்பு விவரங்கள், சேவைகளுக்கான விண்ணப்பம் பெறுதல், மனுக்களின் தற்போதைய நிலை, மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் போன்ற மக்களுக்கு தேவைப்படும் அனைத்து விவரங்களும் மக்கள் தொடர்பு மையத்தின் மூலம் வழங்கப்படும்.



இந்த மையத்தினை நாடு முழுவதிலும் இருந்தும் தொடர்புகொள்வதற்கு ஒரே தொடர்பு எண் வழங்கப்படும். இதன்மூலம் மக்கள் எந்த இடத்திலிருந்தும், இந்த தொடர்பு எண் மூலம் அனைத்து விவரங்களையும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.


வளர்ந்து வருகின்ற இளைய சமுதாயத்தினர் மாணவர்கள் மற்றும் மின் ஆளுமை ஆர்வலர்களுக்கிடையே மின் ஆளுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில், மக்களின் தேவைக்கேற்ப, புதுமையான மற்றும் சிறந்த மின் ஆளுமைக்கான மென்பொருட்களை உருவாக்குகின்ற இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மின் ஆளுமை ஆர்வலர்களுக்கான "மின் ஆளுமைக்கான முதல்-அமைச்சரின் உயரிய விருது ஆண்டுதோறும் வழங்கிட முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இதன்படி செல்லிடைப்பேசி தொழில்நுட்பத்தை கொண்டு மென்பொருள் உருவாக்கம் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் புதுமையான பொருள் உருவாக்கம் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், நரம்பியல் வலையமைப்பை கொண்டு மென்பொருள் உருவாக்கம் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும் என மூன்று பிரிவுகளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மின் ஆளுமைக்கான முதல் அமைச்சரின் உயரிய விருது ஆண்டுதோறும் வழங்கிட முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 18 வயதினை கடந்த மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும், அதிகபட்சம் எட்டு பேர் கொண்ட ஒரு குழு மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

மூன்று பிரிவின் கீழ் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர், முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, முதன்மை செயல் அலுவலர், புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு தேர்வு குழு அமைக்கப்படவும் முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.

செல்லிடைப்பேசி தொழில்நுட்பத்தைக் கொண்டு மென்பொருள் உருவாக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் புதுமையான மென்பொருள் உருவாக்கம், நரம்பியல் வலையமைப்பை கொண்டு மென்பொருள் உருவாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளுக்கான மின் ஆளுமைக்கான முதல் அமைச்சரின் உயரிய விருதினை பெறும் வெற்றியாளர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கான ரொக்கப்பரிசும், ரூ.15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கோப்பையும் வழங்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். இதனால், அதிக அளவில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய மென்பொருள்கள் இனி வருங்காலங்களில் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்."

இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment