Friday, January 6, 2012

சவூதி அரேபியாவில் சினிமா தியேட்டர்கள்


உலகில் சவூதிஅரேபியாவில் மட்டுமே திரையரங்குகள் இல்லை என்பதை அதன் சிறப்பாகவோ, குறையாகவோ சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்தச் சிறப்பு அல்லது குறை நீங்கும் என்பதை அறிவிக்கும் செய்தி இது.

ரியாதிலுள்ள மன்னர் சவூத் பல்கலைகழக விழாவொன்றில் உரையாற்றிய சவூதி பண்பாடு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் டாக்டர் அப்துல் அஸீஸ் கோஜா "சினிமா தியேட்டர்களைத் திறப்பது குறித்து அரசாங்க முடிவு எட்டப்பட்டால் தமது அமைச்சரவை அதற்கான ஒத்துழைப்பை அளிக்கும் என்று அறிவித்துள்ளார். ஊடகப் பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் இச்செய்தியை வெளியிட்டார்.

அமைச்சர் மேலும் பேசும் போது, ரியாத் நகர மேயர் இளவரசர் டாக்டர் அப்துல் அஸீஸ் பின் அயாஃப் கூறியதை மேற்கோள் காட்டினார். "திரையரங்குகளைத் திறப்பதற்கான முயற்சியில் இருக்கிறோம் என்று மேயர் கூறியுள்ள நிலையில், அதற்கான உறுதியான அடிப்படைத் திட்டத் தகவல்கள் கிடைக்காமல் அவ்வாறு மேயர் பேசியிருக்க மாட்டார் என்பதால், திரையரங்குகளை நாட்டில் திறப்பதில் பண்பாடு மற்றும் தகவல்தொடர்பு அமைச்சகம் உதவ ஆயத்தமாகவே இருக்கிறது " என்றார் டாக்டர் கோஜா.

முன்னதாக, ரியாத் நகர மேயர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 2010 ஆம் ஆண்டின் கோடையில்,சவூதியிலிருந்து சுமார் 230,000 பேர்  'திரைப்படம் " என்ற காரணத்துக்காகவே அருகிலுள்ள ஐ.அ.அமீரகம் சென்று வந்தனர் . ஆகவே, சவூதி அரேபியாவில் திரைப்படத்தின் தேவையை இது உணர்த்துகிறது என்பதாகக் கொள்ளலாம்" என்று கூறியிருந்தார். மேயரின் இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு அதிகார மையங்களிலிருந்து ஆதரவும் கிடைத்துள்ளது.

அதேநேரம், சினிமா திரையிடலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் மேலாண்மையை தமது அமைச்சகம் மேற்கொள்ளும் என்றார் அமைச்சர். சவூதி அரேபியாவில் 'பொது' திரையரங்குகள் இல்லையெனினும், பல்வேறு நாடுகளின் தூதரகங்கள்/ துணைத் தூதரக வளாகங்களில் திரைப்பட விழாக்கள் அவ்வப்போது நடைபெறுவதுண்டு

No comments:

Post a Comment