ஜெய்ப்பூர்: சர்ச்சைக்குரிய சல்மான் ருஷ்டியின் தி சாத்தானிக் வேர்சஸ் என்ற நூலிலிருந்து சில பகுதிகளை வாசித்த நான்கு எழுத்தாளர்களை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிலிருந்து வெளியேறுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் சர்ச்சை மேலும் வலுவாகியுள்ளது. ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தார் சல்மான் ருஷ்டி. இருப்பினும் அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக ராஜஸ்தான் போலீஸார் கூறியதைத் தொடர்ந்து அவர் தனது பயணத்தை ரத்து செய்தார்.
இந்த நிலையில் தற்போது சல்மான் ருஷ்டி தொடர்பாக இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. இலக்கிய விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் ஹரி குன்ஸ்ரு, அமிதவா குமார், ஜீத் தாயில், ருசிர் ஜோஷி ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று ருஷ்டியின் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை விழாவில் வாசித்தனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தற்போது இந்த நான்கு பேரையும் விழாவிலிருந்து வெளியேறுமாறு அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனராம். அவர்கள் வெளியேற மறுத்தால் கைதுசெய்யப்படலாம் என்றும் பரபரப்பு நிலவுகிறது.
ஜெய்ப்பூர் விழாவில் கலந்து கொண்டுள்ள இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மத்தியில் ருஷ்டிக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம நிலையில் காணப்படுகிறது. சேத்தன் பகத் கூறுகையில், ருஷ்டி முஸ்லீம் மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார் என்று வர்ணித்துள்ளார். அதேசமயம், தீபக் சோப்ரா என்பவர், சாத்தானிக் வேர்சஸ் நூல் தடை செய்யப்படும் அளவுக்கு மோசமானதல்ல என்று கூறியுள்ளார்.
அதேசமயம், ஜெய்ப்பூர் விழாவுக்கு வந்திருந்த ஓப்ரா வின்பிரேவும் ருஷ்டிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார். புத்தகங்களைத் தடை செய்வதை தான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று அவர் கூறினார்.
சல்மான் ருஷ்டி விழாவுக்கு வரவில்லை என்ற போதிலும் ஜெய்ப்பூர் விழா தற்போது ருஷ்டியை மையமாக வைத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment