Saturday, January 7, 2012

துருக்கி : அரசாங்கத்தை கவிழ்க்க சதி - இராணுவ தளபதிக்கு சிறை


துருக்கியில் சிவிலியன் அரசை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டிய எர்கனக்கோன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் இல்கர் பாஸ்ப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை செய்ய கஸ்டடியில் அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து பாஸ்ப் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று அதிகாலை இஸ்தான்புல்லில் ஸிலிவ்ரி சிறைக்கு பாஸ்பை அரசு தரப்பு வழக்குரைஞர்கள் அழைத்துச் சென்றனர்.

பிரதமர் ரஜன் தய்யிப் எர்துகானின் தலைமையிலான அரசை கவிழ்க்க 2003-ஆம் ஆண்டு தீவிர தேசியவாத அமைப்பான எர்கனேக்கோன் நெட்வர்க்குடன் இணைந்து ராணுவ தலைமை தளபதியான பாஸ்ப் சதித்திட்டம் தீட்டினார் என்பது வழக்கு.

சதித்திட்டம் தீட்டிய வழக்கில் துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் உயர் ராணுவ அதிகாரியான பாஸ்ப் கடந்த 2010-ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பாஸ்புடன் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் உள்பட 400 பேர் சதித் திட்டத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எர்துகானின் தலைமையிலான அரசை கவிழ்க்க மதத்திற்கு எதிரான ராணுவம் பல தடவை முயன்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அரசுக்கு எதிரான சதித் திட்டத்திற்கு பாஸ்ப் தலைமை தாங்கியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசை பலவீனப்படுத்த தவறான தகவல்களை எர்கனக்கோன் நெட்வர்க் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. அதேவேளையில், எதிரிகளை அழிப்பதற்கு அரசின் முயற்சிதான் எர்கனேக்கோன் விசாரணையின் பெயரில் நடைபெறுகிறது என இவ்வழக்கில் கைதான பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாஸ்ப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஏராளமான அதிகாரிகள் ராஜினாமா செய்வார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. முன்னர் இவ்வழக்கில் ராணுவ அதிகாரிகள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தரை, கடல், விமான படை தளபதிகள் பதவி விலகினர்.

No comments:

Post a Comment