Monday, January 9, 2012

பலஸ்தீன்: 10 வயது சிறுவன் அச்சுறுத்தலாம் - ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படை கைது செய்தது


கடந்த சனிக்கிழமை (07.01.2012) இரவு பலஸ்தீனிலுள்ள யபாத் கிராமத்தைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் பலஸ்தீனரின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பல்வேறு அடாவடித்தனங்கள் செய்துள்ளது.

மேற்படி ஊர் மக்களைப் பயமுறுத்தி அச்சுறுத்துமுகமாக தாலிப் இப்றாஹீம் அபூபக்கர் எனும் 10 வயதுச் சிறுவனை பெற்றோரின் கதறலையோ மன்றாட்டத்தையோ பொருட்படுத்தாமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கடத்திச் சென்றுள்ளது. இந்தச் சிறுவன் தவிர, இதே ஊரைச் சேர்ந்த மேலும் பல பலஸ்தீன் பொதுமக்களும் ஆக்கிரமிப்புப் படையின் 'விசாரணை'க்காகக் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதேவேளை, பலஸ்தீன் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பிரதேசவாசிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

துல்கரீம் பிரதேசத்தில் உள்ள பொறியியல் பீட மாணவரான அலி தகத்கா (வயது 19) தன்னுடைய கல்வி நடவடிக்கைகளின் போது இயந்திரம் பொருத்தப்பட்ட பட்டம் ஒன்றைச் சுயமாக வடிவமைத்து, அதனை வானில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டிருந்தார். இந்தக் கல்விசார் பரிசோதனை முயற்சி தன்னுடைய உயிருக்கே அச்சுறுத்தலாய் அமையும் என அந்த மாணவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

மகனின் பொறியியல் திறமையைக் கண்டு பெருமிதமுற்றிருந்த மாணவனின் பெற்றோர்களின் வீடு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் உடைத்து நொறுக்கப்பட்டது. ஆக்கிரமிப்புப் படையினரால் அலி தகத்கா கடத்திச் செல்லப்பட்டான். கூடவே அவனுடைய நண்பனும் பல்கலைக்கழக மாணவனுமான ஜிஹாத் அஸாமும் கைதுசெய்யப்பட்டான் என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment