"பிராந்திய நல்லுறவைப் பலப்படுத்துமுகமாக துருக்கிக்கு விஜயம் செய்யவுள்ள பலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹனீய்யாவின் நோக்கம் பாராட்டுக்குரியது" என துருக்கிய வெளிநாட்டமைச்சர் அஹ்மத் தாவூடொக்லூ தெரிவித்துள்ளார்.
"துருக்கிக்கு வருகைதரும் பலஸ்தீன் பிரமுகர்களை துருக்கி வாழ்த்தி வரவேற்கும். இதற்கு முன்னர் மஹ்மூத் அப்பாஸ், காலித் மிஷைல் போன்ற பலஸ்தீன் பிரமுகர்களை வரவேற்றது போலவே இஸ்மாயில் ஹனிய்யாவும் விமரிசையாக வரவேற்கப்படுவார்" என அன்காராவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய துருக்கிய வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"அந்நிய ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருக்கும் பலஸ்தீன் போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அதனை எதிர்த்துப் போராடும் தார்மீக உரிமை உண்டு" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பலஸ்தீன் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா பிராந்திய நல்லுறவை மேம்படுத்துமுகமாகவும் சூடானில் இடம்பெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமுகமாகவும் மேற்கொண்டுள்ள அரசியல் விஜயத்தின் முதற்கட்டமாக அண்மையில் எகிப்துக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூடானிய அதிபர் உமர் அல் பஷீருடனான உத்தியோகபூர்வ சந்திப்பை அடுத்து செய்தியாளர் மாநாட்டில் கருத்துரைத்த பலஸ்தீன் பிரதமர், "பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலிய முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் காஸா என்பவற்றுக்கும் சூடானுக்கும் இடையிலான உறவுநிலை வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
"பலஸ்தீன் விவகாரத்தில், குறிப்பாக ஜெரூசலம் தொடர்பில் சூடானிய அதிபர் மிகுந்த கரிசனை கொண்டுள்ளார் என்பதை அறிகிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி, ஜெரூசல விவகாரம் தொடர்பாக சாத்தியமான அனைத்து முன்னெடுப்புக்கள் குறித்தும் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment