Thursday, July 5, 2012

கேஸ் சிலிண்டர் வெடிப்பு மரணங்கள் தமிழ்நாட்டில் அதிகம்: முதலிடத்தில் குஜராத்!

 Lpg Cylinder Is Ticking Bomb State
தமிழ்நாட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து கடந்த ஆண்டு மட்டும் 586 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையத்தின் புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் கேஸ் சிலிண்டர் விபத்து நடந்த மாநிலமாக குஜராத் உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 735 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வருமாறு:-

கேஸ் ஸ்டவ் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தும், கேஸ் கசிவினால் ஏற்படும் தீ விபத்திலும் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி செல்கிறது. பல வழிகளில் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனாலும், விபத்துகள் குறைந்த பாடில்லை.

கடந்த ஆண்டில் குஜராத்தில் ஸ்டவ் வெடித்தும், எரிவாயு சிலிண்டர் வெடித்தும் பாதிக்கப்பட்டவர்கள் 762 பேர். இவர்களில் 735 பேர் பலியாகி விட்டனர். தமிழ்நாட்டில் 632 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் 586 பேர் இறந்து போயினர். மராட்டியத்தில் 541 பேரும், ஆந்திராவில் 426 பேரும், கர்நாடகத்தில் 386 பேரும் பலியாகி உள்ளனர். கேரளாவில் மட்டுமே இதன் எண்ணிக்கை குறைவாக (52 பேர்) உள்ளது.

வீட்டு சமையல் அறையில் பயன்படுத்தப்படும், எரிவாயு சிலிண்டர், கேஸ் ஸ்டவ் ஆகியவை பல நேரங்களில் எமனாக மாறி விடுகின்றன. அவ்வப்போது உயிர்களை பலிவாங்கி விடுகின்றன. அந்த வகையில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இது தொடர்பாக, ஸ்டவ் வெடித்தும், எரிவாயு சிலிண்டர் வெடித்தும் உடல் கருகி பலியானவர்களில் 82 சதவிகிதம் பேர் பெண்கள் ஆவர்.

இதில் பெரும்பாலும் விபத்தாக இருந்தாலும், அவை வரதட்சணை பிரச்சனையினால் ஏற்பட்ட கொலையாகவோ, தற்கொலையாகவோ இருக்கலாம் என சமூக ஆர்வர்கள் கூறியுள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் 96 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 91 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment