Friday, July 13, 2012

துணை ராணுவப் படைகளில் வீரர்களுக்கு மனஅழுத்தம்: வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


டெல்லி: எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் ஆகிய பாதுகாப்பு படைகளை சேர்ந்த வீரர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 51 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளதாக ஒர் அதிர்ச்சி ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய நாட்டின் பாதுகாப்பில் முப்படைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் எல்லை பாதுக்காப்பு படை(பி.எஸ்.எப்), மத்திய ரிசர்வ் போலீஸ்(சி.ஆர்.பி.எப்) போன்ற துணை ராணுவ படைகள் பக்கபலமாக செயல்படுகின்றன.
மேற்கண்ட படைகள் பாதுகாப்பு பணிகளில் மட்டுமின்றி, வெள்ளம், தீவிபத்து, பஞ்சம் போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் விபத்துகள் ஏற்படும் போது பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் பி.எஸ்.எப் மற்றும் சி.ஆர்.பி.எப் படைகளை சேர்ந்த வீரர்களுக்கு கடும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதையடுத்து இப்படைகளில் இருந்து ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சரகத்திற்கு ஒருஅறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சி.ஆர்.பி.எப். மற்றும் பி.எஸ்.எப் ஆகிய படைகளின் முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய பாதுகாப்பு படைகளில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களின் பணியின் திருப்தியை அதிகரிக்கும் முறைகள் குறித்தும் ஐஐஎம் நிறுவனத்தை சேர்ந்த ஒரு குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் குழுவிற்கு நிறுவன இணை பேராசிரியர் தீராஜ் சர்மா தலைமை வகித்தார்.
இந்த ஆய்வின்படி, கடந்த 2010 முதல் 2011 வரை உள்ள காலஅளவில் சி.ஆர்.பி.எப். மற்றும் பி.எஸ்.எப். ஆகிய பாதுகாப்பு படைகளில் சேருபவர்களின் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல மேற்கண்ட பாதுகாப்பு படைகளில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதிலும் நாட்டில் உள்ள விமான நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில்(சி.ஐ.எஸ்.எப்) இருந்து ராஜினாமா செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 10 ஆயிரம் பேரில் 37 பேரில் பணியை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு துவக்கம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் சுமார் 31 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற பி.எஸ்.எப் ஜெனரல் பிரகாஷ் சிங் கூறியதாவது,
துணை ராணுவப் படைகள் தற்போது அரசியல்வாதிகள், மனித உரிமை ஆய்வாளர்கள், ஊடகத் துறையினர் ஆகியோரின் கைகளில் சிக்கி தவிக்கிறது. துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் வீரர்களுக்கு, நாட்டிற்காக தாங்கள் உயிரை கொடுத்து வேலை செய்வதை அரசு கண்டுகொள்வதில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனால் தான் ராஜினாமா செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
சாதாரண வாழ்க்கைக்கும், ராணுவப் படையில் வேலை செய்யும் வீரர்களின் வாழ்க்கைக்கும் வித்தியாசம் உள்ளது. அவர்களுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் எதிரி நாட்டு படைகள் மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனால் எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது.
மேலும் துணை ராணுவ படைகளை சேர்ந்த அதிகாரிகளும், வீரர்கள் வெளியேற ஒரு மறைமுக காரணமாக உள்ளனர். சி.ஆர்.பி.எப் படையை பொறுத்த வரை கட்டாய காலத்திற்கு முன்னதாக வெளியேறும் வீரர்களின் பேரில் ரூ.2.5 முதல் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்யப்படுகிறது. மேலும் வெளியே வந்தால், தனியார் நிறுவனங்களில் வேலை கிடைப்பது எளிதாக உள்ளது என்றார்.
சி.ஆர்.பி.எப். படையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் அதிருப்தி உள்ளது. இதனால் கடந்த 2005ம் ஆண்டு படையில் இருந்த 190 அதிகாரிகளில் 30 பேர் ராஜினாமா செய்து வெளியேறி உள்ளனர்.
இது குறித்து முன்னாள் பி.எஸ்.எப் இணை ஜெனரலும், முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனருமான அஜய் ராஜ் சர்மா கூறியதாவது,
சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அடிக்கடி இடமாற்றம் அளிக்கப்படுகிறது. அதேபோல பி.எஸ்.எப். வீரர்களுக்கு எப்போதும், நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால் துணை ராணுவப் படையில் பணியாற்று வீரர்கள், குடும்பத்துடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த காலத்தில் துணை ராணுவப் படையில் பணியாற்றும் வீரர்கள், தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புகின்றனர் என்றனர்.
நாகலாந்து ஆளுநர் நிக்கில் குமார் கூறுகையில், பெரும்பாலான அதிகாரிகள் தங்களின் குடும்பம், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆகியோரை கண்டு பேசுவது மிகவும் அரிது. இதனால் தொலைப்பேசியின் மூலம் தினமும் பல மணிநேரங்கள் பேசி குடும்ப சம்பவங்களை தெரிந்து கொள்கின்றனர் என்றார்.
கடந்த 2010ம் ஆண்டு பி.எஸ்.எப் வீரர்களில் 10 ஆயிரம் பேரில் 254 வீதம் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறி உள்ளனர். கடந்த 2011ம் செப்டம்பர் மாதம் வரை 10 ஆயிரம் பேரில் 226 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.
சி.ஆர்.பி.எப். படையில் 2010ம் ஆண்டு 10 ஆயிரம் பேரில் 345 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். அதேபோல 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 10 ஆயிரம் பேரில் 406 விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.
இதேபோல கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் துணை ராணுவ படைகளில் 36 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment