Wednesday, July 4, 2012

துணை ஜனாதிபதி தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் மோஷினா கித்வாய்?

 Mohsina Kidwai Saifuddin Soz Lobby For Vice Presi Post
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மோஷினா கித்வாய் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வழியாக பிரணாப் முகர்ஜியை முடிவு செய்துவிட்ட காங்கிரஸ் இப்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 790 எம்.பிக்கள் மட்டுமே ஓட்டுப் போட முடியும்.

இந் நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மோஷினா கித்வாய் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த பாஜகவும் முடிவு செய்துள்ளது. தனது கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளம் தலைவரும், பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ்சிங் பாதல், மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரது பெயர்களை பாஜக பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
இதற்கிடையே திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரசில் ஒரு தரப்பினர் ஹமீத் அன்சாரிக்கே மீண்டும் வாய்ப்பளிக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் இதுவரை காஷ்மீரைச் சேர்ந்த யாருக்கும் நாட்டின் உயர்ந்த பதவி கிடைத்ததில்லை என்று கூறி, தனக்கு துணை ஜனாதிபதி தருமாறு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் லாபி செய்ய ஆரம்பித்துள்ளார்.
அதே போல கித்வாயும் தனக்கு துணை ஜனாதிபதி பதவி கோரி மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க ஆரம்பித்துள்ளார். சோஸ், கித்வாய் இருவருமே நேற்று பிரணாப் முகர்ஜியை தனித்தனியே சந்தித்து தங்களது ஆர்வத்தைத் தெரிவித்தனர்.
அப்துல் கலாமை ஜனாதிபதியாக ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டதால் தான் கடந்த முறை முஸ்லீமான ஹமீத் அன்சாரியை துணை ஜனாதிபதியாக்கியது. இந்த முறையும் மீண்டும் அப்துல் கலாமை ஏற்க மறுத்துவிட்ட காங்கிரஸ் மீண்டும் ஒரு முஸ்லீமுக்கே அந்தப் பதவியைத் தர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் தான் கித்வாய் அல்லது ஹமீத் அன்சாரி என்ற செய்தியை இப்போதே வெளியே பரப்பி விட்டுள்ளது.
அதே போல அப்துல் கலாமை முன் நிறுத்தி முஸ்லீம்களின் வாக்குகளுக்கு குறி வைக்கும் பாஜகவின் கனவு பலிக்காததால், அந்தக் கட்சி நஜ்மா ஹெப்துல்லாவை துணை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்துவது குறித்து பேச ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment