Wednesday, July 25, 2012

நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் என்ன?

 Role Power India S President
டெல்லி: இந்திய ஜனநாயக அமைப்பில் குடியரசுத் தலைவர் என்பவர் முதல் குடிமகனாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் தான் அதிக அதிகாரம் கொண்டது. இருப்பினும் கூட முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கும் சில அதிகாரங்களை கொடுத்திருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் 53-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவருக்கென பிரத்யேகமான நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன. நாட்டின் அனைத்து விவகாரங்களும் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் சாசன ரீதியான உயர் நிலைப் பதவிகளை நியமிக்கவும் நீக்கவும் அதிகாரம் கொண்டவர்.
மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உய ர்நீதிமன்ற நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல், கணக்குத் தணிக்கை அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ஆகியோரையும் நியமிக்கும் அதிகாரம் கொண்டவர் குடியரசுத் தலைவர்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரானது குடியரசுத் தலைவரின் உரையுடன்தான் தொடங்கும். நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிடையே ஏதாவது சட்டரீதியான பிரச்சனை உருவானால் இரண்டு அவைகளையும் கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர்.
இந்திய அரசியல் சாசனப்படி ஒரு மாநிலம் உருவாக்குவதற்கான சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது, மாநில எல்லைகளை மறுசீரமைப்பதற்கான சட்டத்துக்கு அனுமதி கொடுப்பது, மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான சட்டத்துக்கு அனுமதி கொடுப்பதும் குடியரசுத் தலைவரின் உரிமை.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே புதிய சட்டமாக நடைமுறைக்கு வரும். நாடாளுமன்ற இரண்டு அவைகளுக்குமான நியமன உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரே நியமிப்பார்.
இருப்பினும் அரசியல் சட்டம் 356-வது பிரிவின் கீழ் ஒரு மாநில ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு முடிவு எடுத்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் மத்திய அமைச்சரவை மறுபரிசீலனை செய்யுமாறு மட்டுமே குடியரசுத் தலைவரால் கோர முடியும். மீண்டும் மத்திய அமைச்சரவை அதே கோப்பை திருப்பி அனுப்பினால் வேறுவழியின்றி கையெழுத்திட்டே ஆகவேண்டும்.
நாட்டின் ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர் என்ற பொறுப்பு குடியரசுத் தலைவருக்குத்தான் உண்டு. முப்படைகளின் தளபதிகளை குடியரசுத் தலைவரே நியமிப்பார்.
இதர நாடுகளுடனான உறவுகளைப் பேணக் கூடியவர் குடியரசுத் தலைவர். வெளிநாட்டுக்கான இந்திய தூதர்கள் அனைவரும் குடியரசுத் தலைவரின் பிரதிநிதிகளாக வெளிநாட்டில் வலம் வருகின்றனர்.
சில விவகாரங்களில் குடியரசுத் தலைவர் மூலமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் கருத்து கேட்கலாம்.
நாட்டில் அவசரகால பிரகடனத்தை குடியரசுத் தலைவரே வெளியிடுவார்.
குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கவும், மாற்றவும், நிறுத்தவும் குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு. தூக்குத் தண்டனையை மாற்றி குற்றவாளிக்கு கருணை அளிக்கலாம்.

No comments:

Post a Comment