Wednesday, July 18, 2012

சென்னை ரயில் நிலையங்களில் ரகசிய கேமராக்கள்


சென்னை: சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெறும் கடத்தல், வழிப்பறி போன்ற குற்றங்களை தடுக்க ஆங்காங்கே ரகசிய கேமிராக்களை பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் குழந்தை கடத்தல், அரிசி கடத்தல், நகை பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்றங்கள் வழக்கமாக நடைபெறுகின்றன. இதில் பணம் மற்றும் பொருட்களை இழக்கும் பயணிகள், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தாலும், பெரும்பாலான குற்றவாளிகளை பிடிக்க முடிவதில்லை.



மேலும் ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டாலும், மறைமுகமாக பல குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடிவதில்லை. இதையடுத்து ரயில் நிலையங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், ஆங்காங்கே ரகசிய கேமராக்களை பொருத்த தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.



ஒருங்கிணைந்த பாதுகாப்பு கண்காணிப்பு திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக சென்னை கடற்கரை (பீச்) ரயில் நிலையத்தில் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை தென்னக ரயில்வே நிர்வாகம் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல். இன்போ சிங்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.



இந்த ரகசிய காமிராக்களின் மூலம் ரயில் நிலையத்தில் நடைபெறும் சம்பவங்கள் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும். அனைத்து கேமிராக்களும், பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து கொண்டே அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கலாம். மேலும் 30 நாட்கள் வரை பதிவாகும் காட்சிகளை கேமிராக்கள் சேமித்து வைத்து கொள்ளும் திறன் கொண்டவை.



இதற்காக சென்னை ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்தில், ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உயர் தரத்திலான 42 அங்குலம் அளவு கொண்ட 2 டி.வி.க்கள் வைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மற்றும் இனி அமைக்கப்பட உள்ள கேமிராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிவி திரையில் தெரியும்.



சுமார் ரூ.40 கோடி செலவிலான இந்த திட்டத்தின் முதல்படியாக, கடற்கரை ரயில் நிலையத்தில் மட்டும் 16 காமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அடுத்த வாரம் முதல் இயங்க துவங்கும். அடுத்தப்படியாக பேசின் பிரிட்ஜ் மற்றும் மற்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரகசிய கேமராக்கள் பொருத்தும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment