வால்டான்வில்லி: அமெரிக்காவுக்கு இது சோகமான காலம். அந்த நாட்டின் பாதிப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துள்ளதாம். வரலாறு காணாத வெயிலும், வராத மழையுமே இதற்குக் காரணம் என்கிறார்கள். மழை வர மேலும் தாமதமானால் அமெரிக்கா முழுவதுமே வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என தேசிய காலநிலை தகவல் மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 30கள் மற்றும் 50களில்தான் இப்படிப்பட்ட பெரும் வறட்சியை அமெரிக்காக சந்தித்தது. அதன் பிறகு தற்போதுதான் வறட்சி அங்கு தாண்டவமாட ஆரம்பித்துள்ளதாம். வறட்சி காரணமாக பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளனவாம். மழை வராவி்ட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய காலநிலை தகவல் மையம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், நாட்டின் 55 சதவீதப் பகுதியில் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வெப்ப மாதமாக காணப்பட்டது. இப்படி ஜூன் மாதத்தில் கடும் வெப்ப நிலை நிலவியது அமெரிக்க வரலாற்றில் இது 14வது முறையாகும்.
அமெரிக்காவில் நிலங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட வறண்டு போய்க் காணப்படுகின்றன. பயிர்கள் கருகி வருகின்றன. ஈரப்பதம் வெகுவாக குறைந்து போய் விட்டது. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது.
1956ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான நிலப்பரப்பு வறண்டு போயிருப்பது இதுவே முதல் முறையாகும். அப்போது 58 சதவீத நிலப்பரப்பு வறண்டு கிடந்தது.
தெற்கு இல்லினாய்ஸில் கென்னி பிரம்மர் என்ற மக்காச்சோள விவசாயி தனது 800 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிரை இழந்து சோகத்தில் உள்ளாராம். மேலும் அவர் வளர்த்து வரும் 400 கால்நடைகளும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனவாம்.
அமெரிக்கா முழுவதும் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் மூன்றில் ஒரு பங்குப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கருகிப் போய் விட்டன. மற்றவையும் கருகி வருகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை திடீர் வறட்சி என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர். காரணம், இது சமீப மாதங்களில் ஏற்பட்டதுதான் என்பதால்.
வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ அமெரிக்க அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் வெயிலுக்கு மக்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெயில் தாங்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். பல மாகாணங்களில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கி் தவித்து வரும் அமெரிக்காவுக்கு இந்த வெயில் காலம் மேலும் பெரும் சோதனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
வறட்சி என்று வந்து விட்டால் ஆண்டிப்பட்டியாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பதே இதிலிருந்து கிடைக்கும் பாடம்...
No comments:
Post a Comment