Friday, July 27, 2012

தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்த பாகிஸ்தான் எஞ்சினியர்

Pakistani Makes Car That Runs On Water
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர். அவரது கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு அரசு அவருக்கும், அவரது கண்டுபிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலேயற்றம் அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆட்டோமொபைல் துறை கற்ற வித்தைகளையும் போட்டு காட்டி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர் வாகர் அகமது என்பவர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். மேலும், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் அந்த காரை சோதனை ஓட்டம் நடத்திக் காட்டி அசத்தியுள்ளார்.
அவரது கண்டுபிடிப்பை அந்நாட்டு அமைச்சரவை துணை கமிட்டி நேரில் மதிப்பிட்டு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக செயல்பட்டு வரும் அந்நாட்டு மத விவகாரத் துறை அமைச்சர் சயீத் குர்ஷித் அகமது ஷா கூறுகையில், " வாகர் அகமதுவுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகள் மற்றும் ஒத்துழைப்பும் வழங்கப்படும்.
மேலும், வாகர் அகமதுவுக்கும், அவர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய தொழில்நுட்பத்திற்கும் தக்க பாதுகாப்பு வழங்கப்படும்," என்றார்.
இதுகுறித்து அந்நாட்டு மீடியாக்களில் வெளியிடப்பட்ட செய்திகளின்படி," சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலிருந்து புதிய தொழில்நுட்பம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை மூலம் இயங்கும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தண்ணீரில் இயங்கும் காரை அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் மற்றும் அந்நாட்டு நிதி அமைச்சர் ஹபீஸ் ஷேக் ஆகியோரும் மதிப்பிட உள்ளதாக வாகர் அகமது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment