டெல்லி: 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவும் களமிறங்குகிறது. நாடு முழுவதும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து அவர்களை சுயேட்சையாகவே அல்லது ஒரு புது கட்சி சார்பாகவோ நிறுத்தப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவருவதில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் மற்ற அரசியல் கட்சிகளும் துரோகம் செய்துவிட்டன. பாரதிய ஜனதாவோ அல்லது காங்கிரசோ ஆட்சிக்கு வந்தால் நாட்டின் எதிர்காலம் இருண்டுபோய்விடும்.
லோக்பால் மசோதாவை அனைத்து கட்சிகளுமே எதிர்ப்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு 2014-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்கப்படும். 2014- மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஊழலற்றவர்களை வேட்பாளர்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்வேன். பின்னர் அவர்களை ஆதரித்து தேர்தலின் போது பிரச்சாரம் செய்வேன்.
பொதுமக்கள் விரும்பினால் அவர்கள் சுயேட்சையாகவோ அல்லது ஒரு கட்சி சார்பாகவோ நிற்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்வேன். இதற்காக புதியதாக ஒரு கட்சி தொடங்குவதில் தவறு இல்லை. அந்தக் கட்சிக்கான தலைவராக அந்த வேட்பாளர்களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது ஒருபோதும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாது. நாங்கள் குறிப்பிட்ட 15 ஊழல் அமைச்சர்களும் நிரபராதிகள்- அப்பாவிகள் என்றால் அவர்கள் மீது விசாரணை நடத்துவதில் என்ன தயக்கம்? லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிக்கும்போது மத்திய அரசு நிச்சயம் தோற்றுவிடும்.
சிபிஐ மீது நம்பிக்கை என்று கூறியதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடுங்கள் என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பது பொறுப்பற்ற செயல் என்றார் அவர்.
No comments:
Post a Comment