டெல்லி: நாட்டின் பொருளாதாரம் எந்த லட்சணத்தில் இருந்தால் என்ன, பணவீக்கம் எகிறிக் கொண்டே போனால் என்ன, ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே போனால் என்ன... அரசியல் கட்சிகளின் பண இருப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதேன் போகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவிலேயே மிக மிகப் பெரிய பணக்கார கட்சியாக ரொம்ப உசரத்தில் போய் நிற்கிறது
கடந்த ஐந்து ஆண்டுகளில் இக்கட்சிக்கு ரூ. 1662 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளதாம். பாஜகவின் பங்கு ரூ. 852 கோடியாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2009ம் ஆண்டுதான் மிகப் பெரிய அளவில் பணம் வந்து குவி்ந்துள்ளது. அப்போதுதான் லோக்சபா தேர்தல் நடந்தது என்பது நினைவிருக்கலாம். அதை வைத்து பெரிய அளவில் வசூல் பண்ணி பணம் பார்த்துள்ளது காங்கிரஸ். வருமான வரித்துறை தகவலின்படி, காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் 2008-09ல் ரூ. 220 கோடியாக இருந்தது. இது 2009-10ல் ரூ. 497 கோடியாக உயர்ந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருடத்திற்கு ரூ. 400 கோடி பணம் பார்த்துள்ளது காங்கிரஸ்,
அதேபோல 2009-10ல் பாஜகவின் வருமானம் ரூ. 220 கோடியாக இருந்தது. பின்னர் 2010-11ல் அது 258 கோடியாக மாறி தற்போது ரூ. 852 கோடியில் வந்து நிற்கிறது.
கடந்த ஆண்டு பொருளாதார மந்த நிலை காரணமாக நாட்டின் டிஜிபி 6.9 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய 2 வருடங்களில் இது 8.4 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்திலும் கூட காங்கிரஸ் கட்சி பெரும் வசூலில் இருந்துள்ளது.
காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தங்களுக்கு நன்கொடை தந்தவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறைக்குக் கொடுத்துள்ளன. ஆனால் மறந்தும் கூட யார் தங்களுக்கு அதிக பணம் கொடுத்தது என்பதை இவர்கள் சொல்லவே இல்லை.
நாட்டின் பெரும் பணக்கார கட்சிகள் வரிசையில், காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்த இடத்தில் பகுஜன் சமாஜ் உள்ளது. இக்கட்சியின் வருமானம் 2009ம் ஆண்டு ரூ. 182 கோடியாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இக்கட்சி வசூலித்த பணத்தின் அளவு ரூ. 425 கோடியாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட ஒரு வகையில் பணக்கார கட்சிதான். இக்கட்சியின் ஐந்து ஆண்டு வசூல் ரூ. 335 கோடியாக உள்ளது. சமாஜ்வாடிக் கட்சியின் வருவாய் ரூ. 200 கோடியாக இருந்தது.
No comments:
Post a Comment