Friday, July 27, 2012

புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிக் குவிக்கும் இந்தியர்கள்!

Indians Own More Than Hundred 900 Apartments
டெல்லி: உலகிலேயே மிக உயரமான கட்டடம் என்ற பெயரைப் பெற்றுள்ள துபாயின் புர்ஜ் கலீபாவில் உள்ள 900 குடியிருப்புகளில் 100க்கும் அதிகமான வீடுகளை இந்தியர்கள்தான் வாங்கியுள்ளனராம்.
உலகிலேயே மிகவும் ஆடம்பரமான குடியிருப்பு என்ற பெயரும் புர்ஜ் கலீபாவுக்கு உண்டு. இத்தகைய பெருமை வாய்ந்த இந்த குடியிருப்பில் வசிப்போரில் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறதாம்.
மொத்தம் உள்ள 900 குடியிருப்புகளில் 100க்கும் மேலான வீடுகளை இந்தியர்கள்தான் வாங்கியுள்ளனராம். மொத்தம் 828 மீட்டர் உயரம் கொண்ட கட்டடம் இது. உலகிலேயே இதுதான் மிகவும் உயரமான கட்டட வளாகமாகும்.
இதுகுறித்து எம்மார் பிராப்பர்டீஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் கடந்த 2010ம் ஆண்டு இங்குள்ள குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டன. அது முதல் இதுவரை 100 முதல் 150 வீடுகளை இந்தியர்கள் வாங்கியுள்ளனர்.
துபாயில் பெருமளவில் முதலீடு செய்வதில் இந்தியர்கள் காட்டி வரும் ஆர்வத்தையே இது காட்டுகிறது. துபாயில் சொத்துக்கள் வாங்குவதில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் இங்கு பெருமளவில் சொத்துக்களை வாங்குகின்றனர், விற்கின்றனர். அவர்களே கட்டடம், வீடு வாங்குவது தொடர்பாக அதிக அளவிலான தகவல் கோரி அணுகுகின்றனர் என்றார்.
புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கியுள்ளோரில் முக்கியமானவர்கள் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர்.
இந்த கட்டட வளாகத்தில் மொத்தம் 7 வீடுகளை வாங்கி வைத்துள்ளார் எம்.வி.ஜார்ஜ் என்பவர். இவர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் 14 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
206 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலீபாவில் கடந்த 2008ம் ஆண்டு ஒரு சதுர அடி ரூ. 1,06,000 என்று விற்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக ரியல் எஸ்டேட் மார்க்கெட் சரிந்து போனதால் தற்போது ஒரு சதுர அடிக்கு 38,000 முதல் 45,000 வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment