டெல்லி: பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு நெருக்கடி கொடுத்து வரும் பாபா ராம்தேவுக்கு எதிராக வருமான வரித்துறையை களமிறக்கவுள்ளது மத்திய அரசு.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான், டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய ராம்தேவின் கூட்டத்தில் நள்ளிரவில் போலீசார் நுழைந்து லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைந்து ஓடச் செய்தனர்.
இந் நிலையில் கொஞ்ச காலம் சும்மா இருந்த ராம்தேவ், இப்போது அன்னா ஹசாரே தனது அமைப்பைக் கலைத்துவிட்டு இடத்தைக் காலி செய்ததும் அந்த இடத்தை முழுவதுமாக பிடிக்க முயன்று வருகிறார். முதலில் உண்ணாவிரதம் என்று கூறிவிட்டு திடீரென நாடாளுமன்றம் நோக்கி பேரணி என்று கூறிக் கொண்டு நேற்று டெல்லியையே அல்லோலப்படுத்தினார் ராம்தேவ்.
போலீசாரிடமிருந்து கைதாகாமல் தப்ப திடீரென கூட்டத்திலிருந்து தலைமறைவாவதும், திடீரென பஸ் மீது ஏறி நிற்பதும், எந்த அறிவிப்பும் இல்லாமல் டெல்லியில் முக்கிய சாலைகளில் எல்லாம் கூட்டமாக போய் நிற்பதுமாக நேற்று முழுவதும் டெல்லியையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் ராம்தேவ்.
இந் நிலையில் இன்று அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் அடுத்த தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்கத் தயாராவோம் என்று அறிவித்துள்ளார். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் உதவியோடு ராம்தேவ் தங்கள் மீது தொடுத்துள்ள தாக்குதலை வேறு வழியில் கையாளும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. (ராம்தேவுக்கு காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கும் முலாயம் சிங்கும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது)
தனி விமானங்கள், வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்கள், சொந்தமாக தீவுகள், ஆயுர்வேத பொருட்கள் வியாபாரம் என ராம்தேவுக்கு வசதி வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
இந் நிலையில், இவரது அறக்கட்டளையும் ஆயுர்வேத விற்பனைப் பிரிவும் வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன. ஆனாலும் அதற்கு பதில் சொல்லாமல் தவிர்த்து வரும் ராம்தேவ், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை உடனே இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கையோடு நிற்கிறார்.
இந் நிலையில், ராம்தேவின் நிதி மோசடிகள், வரி ஏய்ப்புகள் குறித்த முழு விவரங்களையும் திரட்டி வருகிறது அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நிதியமைச்சகம்.
தனது அறக்கட்டளையை தன்னார்வ அமைப்பாக ராம்தேவ் பதிவு செய்துள்ளார். ஆனால், அரசியல் வேலைகளுக்கு அறக்கட்டளையை இவர் பயன்படுத்தியுள்ளதால் அதற்குத் தரப்பட்ட வரி விலக்குகளை மத்திய அரசு விலக்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும் வருமான வரி விலக்கு பெற்ற இந்த பதஞ்சலி யோகாபீத் என்ற அறக்கட்டளை லாப நோக்கின்றி தான் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், தன்னார்வ அமைப்பு என்ற பெயரில் ஏராளமான வர்த்தக செயல்களில் ஈடுபட்டு லாபம் பார்த்துள்ளார் ராம்தேவ்.
இந்த அமைப்புக்கு வரி விலக்கை திரும்பப் பெற்றால் கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொண்ட பல்லாயிரம் கோடி வர்த்தகத்துக்கு வரியாக ராம்தேவ் ரூ. 300 கோடி வரை கட்ட வேண்டி வரும். இதைக் கட்டத் தவறினால் இவர் மீது வரி ஏய்ப்பு சட்டத்தின் கீழும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியும்.
ராம்தேவின் அறக்கட்டளை வருமானம், நன்கொடைகள், யோகா முகாம்களில் திரட்டப்பட்ட நிதி, ஆயுர்வேத பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்த பணம் உள்ளிட்ட தகவல்களைத் திரட்டியுள்ள நிதியமைச்சகம் விரைவில் ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளது.
அவரிடமிருந்து சரியான பதில் கிடைக்காவிட்டால் நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம்.
No comments:
Post a Comment