டெஹ்ரான்: வளர்ந்து வரும் நாடுகளின் குரல் உலகளவில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று தொடங்கிய அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங் பேசியதாவது:
அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கும் ஈரானுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். உலகத்தில் அமைதி, பொருளாதார நிலை, பாதுகாப்புத் தன்மை, மேம்பாடு என அனைத்திலும் அணிசேரா நாடுகளின் முக்கியத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறிவரும் உலகச் சூழலில் அணிசேரா நாடுகள் அமைப்பின் தேவை அவசியமானதாக இருக்கிறது. மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆதரிக்கிறது. இப்படியான மாற்றங்களில் அன்னிய சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாது.
சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. எனினும், இந்த நிலையை அமைதியான வழியில் கையாண்டு சுமூக முடிவை எட்ட வேண்டும்.பாலஸ்தீனத்தில் பல காலமாக போராடி வரும் மக்கள் தங்களுக்கான உரிமையுடன், தங்களது சொந்த பகுதியில் அமைதியாக வாழ வழிவகைக் காணப்பட வேண்டும் என்று அணிசேரா நாடுகள் விரும்புகின்றன.
சர்வதேச பயங்கரவாதம், பொருளாதாரத்தில் நிலையற்ற வளர்ச்சி, வளர்ந்து வரும் இணையதள அச்சுறுத்தல், எரிசக்தி, தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்றவற்றை அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு உள்ள நிதி மற்றும் முதலீட்டு பிரச்சினைகள் குறித்து வளர்ந்து வரும் நாடுகளின் குரல் உலக அளவில் நமது குரல் ஓங்கி ஒலித்தால்தான் சுமூகமான தீர்வு காணப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment