டெல்லி: அரசுப் பதவிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு பதவி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
இத் தகவலை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எழுந்து, கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தலித்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தருவதாக மத்திய அரசு உறுதிமொழி தந்தது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தக் கூட்டத்தையே மத்திய அரசு கூட்டவில்லை.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்ட நிலையில், உடனடியாக பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை இயங்க விட மாட்டோம் என்றார்.
இதையடுத்து எழுந்த பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் நாராயணசாமி, இந்தக் கூட்டத் தொடரிலேயே இது தொடர்பான கூட்டத்தை பிரதமர் கூட்டி நல்ல முடிவை எடுப்பார் என்றார்.
ஆனால், இந்த பதிலால் திருப்தியடையாத பகுஜன் சமாஜ் எம்பிக்கள் அவையின் மையப் பகுதியில் கூடி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே பாஜக எம்பிக்கள் எழுந்து, முதலில் கறுப்புப் பண விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று கூறி, மாயாவதியின் கோரிக்கையை அமுக்க முயன்றனர்.
கறுப்புப் பணத்துக்கு எதிராக ராம்தேவ் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். எனவே முதலில் கறுப்புப் பணம் குறித்துப் பேச வேண்டும் என பாஜக எம்பிக்கள் ரவிசங்கர் பிரசாத், சாந்த குமார் ஆகியோர் கோரினர். இதையடுத்து பகுஜன் சமாஜ்- பாஜக எம்பிக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் அமளி நிலவியது.
இதையடுத்து அவையை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரி பிற்பகல் வரை ஒத்தி வைத்தார்.
21ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்:
இந் நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து வரும் 21ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, 22ம் தேதி நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment