Friday, August 24, 2012

ஃபாசிஸ்டுகளின் நவீன ஆயுதம்: ஸைபர் தாக்குதல்!

ஒரு சமூகத்தில் நன்றியறிதல்களும்,பரஸ்பர பாராட்டுகளும் குறைந்து கண்டன குரல்கள் பெருகினால் அது நிம்மதி இழந்த சமூகமாக மாறிவிடும். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அப்படி ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது கண்டிப்பாக சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களை தான் சாரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. 

சமீபத்தில் ஒரு சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தி இந்தியாவையே உலுக்கியது.தென் மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என்றும் அதற்கு சில பதிவுகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஆதாரமாக வைத்து சமூக வளைதளங்கள் மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமும், இன்டர்நெட் வழியாகவும் பரப்பிய செய்திகளால் வட மாநில மக்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கே இடம்பெயர்ந்த காட்சி பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்த எல்லோருடைய மனதிலும் இயல்பாகவே ஒரு கேள்வி எழுப்பியது இது ஜனநாயக நாடுதான? இது மத சார்பற்ற நாடுதான? 

மத்திய, மாநில அரசுகள் இது மார்ஃபிங் செய்யப்பட்ட பதிவுகள் என்று கண்டறிந்து உடனே சில அறிக்கைகளை வெளியிட்டது, வழக்கம் போல் அண்டை நாடான பாகிஸ்தான், முகவரியே இல்லாத சில இஸ்லாமிய இயக்கங்கள் தான் இதற்கு காரணம் என்றது. உடனே சில இணையதளங்களையும் முடக்கியது, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்புவதையும் தடை செய்தது.

கர்நாடகாவில் உள்ள இரயில் நிலையங்களில் இருந்து வெளியேறி கொண்டிருந்த வட மாநிலத்தவருக்கு ஒரு கும்பல் வழியில் அவர்கள் சாப்பிடுவதற்கு உணவு பொட்டலங்களை வழங்கி கொண்டிருந்தது. அது வேறுயாருமில்லை இந்தியாவில் தீவிரவாத சம்பவங்களையும், வதந்திகளையும் பரப்புவதில் கைதேர்ந்தவர்களான ஃபாஸிஸ இயக்கங்கள் தான். உண்மையிலேயே அவர்களுக்கு தேசத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் வட மாநில மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை போக விடாமல் தடுத்திருக்க வேண்டும், மாறாக அவர்களை வழியனுப்பி இனக்கலவரத்தின் வேகத்தை அதிகரிக்க செய்யும் வேலைகளை செய்திருக்கின்றனர். 

கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி தேசபிதா காந்தியை கொன்ற காலம் முதல் இன்று வரை முஸ்லிம்கள் மீது தான் பழிசுமத்துகின்றனர் இந்த  ஃபாஸிஸ தீவிரவாதிகள்.தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அவர்கள் தங்கள் தாக்குதல்களை வடிவமைக்கின்றனர். இப்போது அவர்கள் கையில் எடுத்திருப்பது தான் "சைபர் தாக்குதல்". 

இதன் மூலம் வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் பரப்பி மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை இந்தியாவை விட்டே விரட்ட வேண்டும்  என்னும் நோக்கில் செயல்படும் இது போன்ற விஷக்கிருமிகளை அழித்தொழிப்பதை விட்டுவிட்டு விசாரணையின் வீரியத்தை திசைதிருப்புவது மக்களை ஏமாற்றும்  வேலையாகத் தான் இருக்க முடியும். 

அதேபோன்று முஸ்லிம்களின் புனித பண்டிகையான ரம்ஜான் முந்தின தினம் இரவு ஒரு குறுஞ் செய்தி முஸ்லிம்களை நிம்மதி இழக்க செய்தது. "ரெட் கோன் என்ற மெஹந்தியை ஒரு சிறுமி கையில் இட்டதும் அவளது கைகளும்,கால்களும் புண்ணாகி விட்டன.எனவே மருத்துவர்கள் அவளது கைகளையும்,கால்களையும் துண்டித்துவிட தீர்மானித்தனர்" என்ற வதந்தியால் மக்கள் பீதியடைந்து மருத்துவமனைக்கு படையெடுத்து சந்தோசமான திருநாளை துக்கமாக மாற்றியது. 

தமிழ்நாடு முழுவதும் பரவிய இந்த வதந்தியால் மக்கள் பெரும் பீதியுடனும், அச்சத்துடனும் இந்த பெருநாளை கொண்டாடினர். 

இது போன்ற செயல்களால் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி கலவரம் ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைவதற்கும் ,வரணாசிரம கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கமுடன் செயல்படும்  ஃபாஸிஸ தீவிரவாத இயக்கங்களின் எண்ணங்கள் நிறைவேறிவிடுமோ என்ற அச்சஉணர்வு உண்மையான ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஏற்படுகிறது. 

அஸ்ஸாமில் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கும் போடா இன தீவிரவாதிகளுக்கும் இனக்கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது அப்படியே 2002-ல் குஜராத்தில் அரங்கேறிய இன அழித்தொழிப்பின் தொடர்ச்சி என்று தான் கூற வேண்டும். 

அதற்கு பலம் சேர்க்கும் விதமாக சங்பரிவாரத்தைச் சார்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானி போடோ பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திலும் வகுப்பு வெறி பேச்சைப் பேசியுள்ளார். இது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கும் செயலாகத் தான்  கருத  முடியும். 

இது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள், அதற்க்கு துணை போகின்றவர்கள் மீது கருணை கட்டினால், இது போன்ற தேசதுரோக செயல்கள் இந்தியா முழுவதும் பரவி நாடே நிம்மதியற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.  

இந்தியாவின் எதிரிகளான ஃபாஸிஸ தீவிரவாதிகளையும் அவர்களுக்கு துணைபோகும் அரசியல் கட்சிகளையும் இந்தியாவை விட்டே துடைத்தெறிந்தால் தான் இந்தியாவின் மதசார்பற்ற, ஜனநாயக விழுமியங்கள் மீதுள்ள மக்களின் நம்பிக்கை குறையாது.
-முஹம்மது அபூபக்கர்

No comments:

Post a Comment