டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பாஜக தலைவர் நிதின் கத்காரி ஆகியோரது வீடுகளை டெல்லியில் முற்றுகையிட முயன்ற அன்னா ஹசாரே குழுவினர் மீது போலீசார் தடியடி நடத்தி , கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர்.
டெல்லியில் இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங்கை கெஜிர்வால் தலைமையில் ஒரு குழுவினரும் சோனியா வீட்டை மனிஷ் சிஷோடியா,விஸ்வாஸ் தலைமையிலான குழுவினரும் பாஜக தலைவர் நிதின் கத்காரிவீட்டை சஞ்சய்சிங் தலைமையிலான குழுவினரும் முற்றுகையிட ஒன்று திரண்டனர். டெல்லியில் ஏற்கெனவே உஷாராக இருந்த போலீசார் அன்னா குழுவைச் சேர்ந்த அனைவரையும் கூண்டோடு தடுத்து வைத்து அப்புறப்படுத்தினர். அனைவரும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தலைமையில் அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பிற்பகலில் பிரதமர்மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் நிதின்கத்காரி ஆகியோரது வீடுகளின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். ஆனால் போலீசார் இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததால் தடையை மீறி செல்லக் கூடாது என எசரித்தனர். இதனையும் மீறி அரவிந்த் கெஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன் உள்ளிட்ட அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அன்னா ஹசாரே கோஷ்டியை டெல்லி வீதிகளில் விரட்டியடித்தனர். இருந்தபோதும் பிரதமர் வீட்டின் முன்புறம் இருந்த தடுப்புகளை அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் உடைத்து நொறுக்கினர்.
இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்த கெஜ்ரிவால், பிரஷாந்த் பூஷண் உள்ளிட்ட அன்னா கோஷ்டி தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று காலையில் தமது போராட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது:
டெல்லி போலீசார் எங்களை தடுத்தது பற்றி நாங்கள் ஆச்சரியப்படவில்லை. நான் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததால் தடுத்து வைக்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இந்த நாட்டின் பொது அமைதிக்கு நான் அச்சுறுத்தலா? அல்லது காங்கிரஸ், பாஜக ஆகியவை அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளனவா? இப்பொழுது தடுத்து வைக்கப்பட்டு நாங்கள் விடுவிக்கப்பட்டாலும் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி பகல் 12 மணியளவில் தலைவர்களின் வீடுகளை மீண்டும் முற்றுகையிடுவோம். எங்கள் போராட்டத்தை ஒடுக்க டெல்லி மெட்ரோ ரயில் சேவையை நிறுத்தியிருப்பது என்பது அவசரகாலத்தை நினைவுபடுத்துகிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment