Wednesday, August 22, 2012

அசாஞ்சேவுக்கு ஆதரவு: இங்கிலாந்தில் அரசு இணையத்தளங்கள் முடக்கம்


விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் மீதான நடவடிக்கைகளை எதிர்க்கும் விதமாக இங்கிலாந்து அரசின் இணையத்தளங்களை மர்ம நபர்கள் முடக்கிப் போட்டுள்ளனர்.
விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியவர்.
அமெரிக்க அரசு அவர் மீது கடும் கோபத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் சுவீடன் நாட்டில் 2 பெண்களை பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக லண்டனில் இருந்த அசாஞ்ச் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சுவீடன் கேட்டுக் கொண்டதின் பேரில் அவரை சுவீடனுக்கு நாடு கடத்த இங்கிலாந்து முடிவு செய்தது. இதனால் கடந்த 19ஆம் திகதி அவர் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப் போவதாக கடந்த வாரம் ஈக்குவடார் அறிவித்தது. தூதரகத்தில் இருந்து எப்போது வெளியே வந்தாலும் அசாஞ்ச் கைது செய்யப்படுவார் என இங்கிலாந்து தெரிவித்தது. இப்பிரச்னையால் இருநாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அசாஞ்ச் விஷயத்தில் இங்கிலாந்தின் நடவடிக்கைகளை கண்டித்து அந்நாட்டு அரசு இணையத்தளங்களை கம்ப்யூட்டர் ஹேக்கிங் கும்பல் நேற்று முன்தினம் இரவு முடக்கியது.
உள்துறை, நிதி அமைச்சக இணையத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த இணையத்தளங்களில் முக்கியமான தகவல்கள் எதுவும் இல்லை என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
மேலும் அசாஞ்ச் விஷயத்தில் முடிவை மாற்றும் எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

No comments:

Post a Comment