சூரத்: அரசியல் கட்சி தொடங்க சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் முடிவு செய்துள்ளதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஊழல் எதிர்ப்பு இயக்க பேனரையும் ஹசாரே உருவப் படத்தையும் தீ வைத்து எரித்தனர்.
வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தது அன்னா ஹசாரே ஆதரவுக் குழு. அப்போது அரசாங்கம் ஹசாரே குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கமும் முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் தற்போது நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலையில் அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வெறுப்பின் உச்சத்துக்குப் போன அன்னா ஹசாரே அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் ஹசாரே ஆதரவாளர்களின் ஒருதரப்பினர் இதை ஏற்க மறுத்தனர். அரசியலில் குதிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட அதே உண்ணாவிரதப் பந்தலிலேயே ஹசாராவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பியிருந்தனர். இதே எதிர்ப்பு நாடு முழுவதும் அன்னா ஹசாரே குழுவினரிடத்தில் எழுந்தது.
இதன் உச்சகட்டமாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் அன்னா ஹசாரேயின் உருவ படத்தையும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் பேனர்களையும் எரித்து அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்னா ஹசாரே குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு மற்றொரு சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷூம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment