Tuesday, August 21, 2012

பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது- உச்சநீதிமன்றத்தில் பி.ஏ.சங்மா வழக்கு

 Sangma Moves Sc Against Pranab S Election As President
டெல்லி: நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டார். பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பி.ஏ.சங்மா போட்டியிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் பரிசீலனையின் போதே பி.ஏ.சங்மா இத்தகைய ஆட்சேபத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து வேட்புமனு பரிசீலனை ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது புள்ளியியல் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து பிரணாப் ஏற்கெனவே ராஜினாமா செய்திருப்பதாக ஒரு கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அக்கடிதத்தில் இருக்கும் பிரணாப் முகர்ஜியின் கையெழுத்து போலியானது என்று சங்மா தரப்பு வாதிட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தற்போது சங்மா முறையீடு செய்திருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் போது ஆதாயம் தரும் பதவியான இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராக பிரணாப் இருந்தார் என்று கூறியுள்ளார்.
பி.ஏ.சங்மாவுக்காக மூத்த வழக்கறிஞரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சத்பால் ஜெயின் இம்மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது என்பதுடன் பி.ஏ.சங்மாவை வெற்றி பெற்றவராக அறிவிகக வேண்டும் என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment