Friday, August 3, 2012

லஞ்சம் வாங்குபவர்கள் பற்றி புகார் கொடுக்கணுமா? இதைப் படிங்க

சென்னை: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை எளிதாகத் தொடர்பு கொள்ள உதவும் இணையதளத்தை வாசர்களுக்குக் கொண்டு செல்லும் கடமையுணர்வுடன் இந்தத் தகவலை வெளியிடுகின்றோம்.
லஞ்சம் எங்கு எங்கு எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு எல்லாம் சட்டம் வளைந்து நெளிந்து போகின்றது. இதனால் தான் பல குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது அரசின் தவறு அல்ல. ஒரு சிலரின் தவறே. நமது நாடு லஞ்ச லாவண்யம் இன்றி நேர்மையாக செயல்பட்டாலே உலக அளவில் முதன்மை நாடாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/ என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து வருவதைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். இந்த நிலையில் லஞ்ச பேய் பிடித்த அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தெரிவிப்பது நமது தலையாய கடமையாகும். இதைச் செய்ய பலருக்கும் குழப்பம், தயக்கம். அந்த குழப்பத்தையும், தயக்கத்தையும் போக்கியே ஆக வேண்டும்.
யாராவது அதிகாரி லஞ்சம் கேட்கிறாரா உடனே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். புகார் கொடுத்தால் என்னவாகுமோ என்று அஞ்ச வேண்டாம்.

No comments:

Post a Comment