Tuesday, August 7, 2012

"குஜராத் பரிவர்த்தன் கட்சி" - புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் கேசுபாய் பட்டேல்

 Keshubhai Formally Launches Gujarat Parivartan Party
அகமதாபாத்:குஜராத் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பிளவுபட்டுள்ளது. மாநில முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டி மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல், குஜராத் பரிவர்த்தன் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக கேசுபாய் பட்டேலும் அவரது ஆதரவாளர்களும் சனிக்கிழமையன்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிய கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேசுபாய் பட்டேல், தமது புதிய கட்சிக்கு குஜராத் பரிவர்த்தன் கட்சி என்ற பெயர் சூட்டியிருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெற உள்ள மாநில பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் கேசுபாய் பட்டேல் அறிவித்துள்ளார்.
கேசுபாயின் இந்த அணியானது அனைத்து மோடி எதிர்ப்பாளர்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கேசுபாய்க்கு ஆர்.எஸ்.எஸ். மற்று சங் பரிவார அமைப்புகளின் தொண்டர்களிடையே பெரும் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வரும் பேரவைத் தேர்தல் மோடிக்கும் பாஜகவுக்கும் பெரும் சவாலானதாகவே இருக்கக் கூடும்.

No comments:

Post a Comment