Friday, August 17, 2012

ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு

 Cag Slams Development Fee Concessional Land Delhi
டெல்லி: ரூ. 24,000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதன்மூலம் நாட்டுக்கு ரூ. 24,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அமைப்பான சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான சிஏஜியின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்து. அதில், டெல்லியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு 239 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 24,000 கோடியாகும். ஆனால், அதை ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குத் தந்துள்ளனர்.
இந்த விமான நிலையம் மூலம் அடுத்த 60 ஆண்டுகளில் ரூ. 1.64 லட்சம் கோடி ஈட்ட முடியும் என்ற நிலையில், இவ்வளவு குறைந்த குத்தகைக் கட்டணத்துக்கு நிலம் தரப்பட்டது ஏன்?.
இவ்வளவு குறைந்த விலைக்கு நிலம் கிடைத்தும் கூட அந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு பயணியிடமும் விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில் பணத்தை வசூலித்து வருகிறது ஜிஎம்ஆர் நிறுவனம். இந்த கட்டணம் மூலம் மட்டும் இதுவரை அந்த நிறுவனம் ரூ. 3,415 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
விமான நிலையம் கட்ட முதலில் ஒப்பந்தம் போடப்பட்டபோது விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் குறித்து அதில் எந்த விவரமும் இல்லை. ஆனால், பின்னால் அதை விமானப் போக்குவரத்துத்துறை சேர்த்து ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு உதவியுள்ளது.
இவ்வாறு சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment