Wednesday, September 4, 2013

போலி என்கவுண்டர்: அமித்ஷாவை தப்ப வைக்கும் முயற்சி! ஸ்டிங் ஆபரேசன் மூலம் அம்பலம்!

துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், மோடியின் நெருக்கமான அமித்ஷாவை தப்ப வைக்க செய்த முயற்சி ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் வெளிவந்துள்ளது.
பா.ஜ.க செய்தி தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரகாஷ் ஜாவேத்கர், பூபேந்தர் யாதவ் எம்.பி, பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம்லால் குப்தா ஆகியோர் நடத்திய சதித்திட்டம் பத்திரிகையாளரான புஷ்ப குமார் ஷர்மா, ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளார்.
மகன் கொல்லப்பட்டதற்காக நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி பிரஜாபதியின் தாயார் நர்மதா பாயியை ஏமாற்றி பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து வாங்குவது உள்ளிட்ட சதி வேலைகள் புஷ்ப குமார் ஷர்மா பதிவுச் செய்துள்ள வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளன.
வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் வழக்கறிஞரை நாங்கள் தாம் நியமிப்போம் என்று ஜாவேத்கரும், பூபேந்திர யாதவ் கூறுவது வீடியோவில் தெளிவாக உள்ளது. மேலும் போலி என்கவுண்டர்களை நிகழ்த்துவதற்கான பொறுப்பை நரேந்திரமோடி அமித்ஷாவிடம் ஒப்படைத்ததும் வீடியோவில் இருந்து தெரியவருகிறது.
மத்திய பிரதேச கூடுதல் அட்வக்கேட் ஜெனரல் மனோஜ் திரிவேதி, வழக்கறிஞர் கோவிந்த் புரோகித் ஆகியோரின் பங்கும் இதில் தெளிவாக உள்ளது.
நரேந்திர மோடியின் உத்தரவின் பேரிலேயே போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக வீடியோ காட்சிகள் கூறுவதாக புஷ்ப ஷர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர், சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் ஆகிய வழக்குகளில் அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியாவுக்காக மனோஜ் திரிவேதி தலையிட்டுள்ளார் என்று புஷ்பகுமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க எம்.பிக்களும், மூத்த தலைவர்களும், வழக்கறிஞர்களும் இணைந்து நடத்திய சதித்திட்டம் வெளிவந்துள்ளதாக புஷ்பகுமார் கூறினார்.
வழக்கை சீர்குலைக்க நடந்த முயற்சி வெளியாகி இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறினார்.
வீடியோ காட்சிகள் ஆதாரமாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். இவ்வழக்கில் சி.பி.ஐயுடன் தன்னையும் கட்சி தாரராக இணைக்க கோரி வழக்கறிஞர் காமினி ஜெய்ஷ்வால் மூலமாக புஷ்ப குமார் மனு அளித்துள்ளார். இம்மனுவை நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என தெரிகிறது.

No comments:

Post a Comment