Thursday, September 12, 2013

செப். 15 அண்ணா பிறந்த நாளில் 7 வருடம் கழிந்த ஆயுள் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று 7 வருடம் கழிந்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா அவர்களின்  பிறந்த நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை விதிப்படி, கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில், 2007ம் ஆண்டில்  16 ஆயுள்தண்டனை கைதிகளும், 2008ம் ஆண்டில் 1405 ஆயுள்தண்டனை கைதிகளும், 2009ம் ஆண்டில் 10 ஆயுள்தண்டனை கைதிகளும், 2010ம் ஆண்டில் 13 ஆயுள்தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 1992ல் 230 ஆயுள்தண்டனை கைதிகளும், 1993ல் 132 ஆயுள்தண்டனை கைதிகளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அண்ணா பிறந்த நாளில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலையாகும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பொது சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறைக்கைதிகள் தாங்கள் விடுதலை ஆகுவோம் என்ற நம்பிக்கையில் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சிறை இன்றைக்கு மன நோயாளிகளை அதிக அளவு உற்பத்தி செய்யக்கூடிய இடமாக   இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற நிலையை ஏற்படுத்தி விடாமல், சிறைவாசிகளின் விடுதலை விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது நிலையை மாற்றிக் கொண்டு ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிடும் அறிவிப்பை வெளியிட  வேண்டும்.
தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார்த்த வண்ணம் அவர்களுடைய குடும்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அரசு மனம் இரங்க வேண்டும் என்று பொது சமூகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக  முஸ்லிம் இளைஞர்கள் இன்றும்  சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள் மற்றும் மனைவி,  குழந்தைகள் என  வருடா வருடம் அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தங்களுடைய கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் முறையிட்டு வருகின்றனர்.
எனவே அண்ணாவின்  105வது  பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று  தமிழக அரசு 7 ஆண்டுகள் கழிந்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும்   விடுதலை செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  சார்பாக  கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment