Wednesday, September 12, 2012

கர்நாடகா : குர்-ஆன் ஓதி முடித்த "அன்ன பூரணி"


ஹுப்ளி, பஞ்சாரா தெருவை சேர்ந்த சுரேஷ்-ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் அன்னபூரணி, திருமறை குர்-ஆன் முழுவதையும், அதன் மூல மொழியான அரபியில் ஓதி முடித்துள்ளார்.
ஹுப்ளி "விமன்ஸ் பாலிடெக் கல்லூரி"யில் படித்து வரும் அன்னபூரணிக்கு, சிறு வயது முதல், தானும் முஸ்லிம் குழந்தைகளைப்போல குர்-ஆன் ஓத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அதை தனது தாயிடம் கூறியுள்ளார். அதை தொடர்ந்து, அன்னபூரணி குடும்பத்தினர் "காசின் பாஷா-குல்ஜார் பானு தம்பதி"களை அணுகியுள்ளனர்.

அவர்களது ஏற்பாட்டின் பேரில், பள்ளிவாசல் இமாமின் மனைவி பீபிஜான், அன்னபூரணிக்கு குர்-ஆன் (பார்த்து) ஓத பயிற்சி கொடுத்து வந்தார். கல்லூரி படிப்புக்கிடையிலும், தினமும் பிற முஸ்லிம் குழந்தைகளுடன் சேர்ந்து, குர்-ஆன் ஓதிவந்த அன்ன பூரணிக்கு, குர்-ஆன் முழுமையாக ஓதி முடிக்க, 4 ஆண்டுகளானது.

மேலும், ஊரிலுள்ள முஸ்லிம் குழந்தைகள் குரான் ஓதி முடித்த பின் "ஹதியா" செய்யும் வழக்கம் உடையவர்களாக உள்ளனர். பல குழந்தைகள், குரான் ஓதி முடித்து ஹதியா செய்து வருவதை பார்த்து வந்த அன்ன பூரணிக்கும், குரான் முடித்தவுடன் "ஹதியா" செய்யும் ஆசை வரவே, டைலர் தொழில் செய்து வரும் அன்னபூரணியின் தந்தை சுரேஷ், தங்கள் சமுதாய பிரமுகர்களிடம் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பின்னர் குரான் ஓதி முடித்ததற்காக "குரு தட்சணை விழா" என்ற பெயர் சூட்டி, ஹிந்து-முஸ்லிம் என, எல்லா சாராரையும் அழைத்து சுமார் 400 பேருக்கு விருந்து வைத்து குரான் ஹதியா நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர்.

விழாவில், அன்னபூரணி குரான் ஓதியதை கேட்ட அவரது உறவினர்கள், இதில் ஒரு இனிமை இருப்பதாகவும், இதை கேட்பதால் உள்ளத்தில் அமைதி ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

தற்போது,கல்லூரிக்கு செல்லும் அன்னபூரணி "ஹிஜாப்" அணிந்து செல்வதுடன், தொழுகை-நோன்பு போன்றவற்றையும் கடைப்பிடித்து வருவதாக கூறுகின்றார், அவரது தாயார் ராஜேஸ்வரி.

No comments:

Post a Comment