அகமதாபாத்: நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோத்னானியை காப்பாற்ற முதல்வர் நரேந்திர மோடியின் அரசு தீவிரமாக முயன்றது என்று இந்த வழக்கில் மாயாவுக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தெரிவித்துள்ளார். இதனால் மோடிக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்திய இந்த இனவெறிப் படுகொலை வன்முறையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதில் நரோடா பாட்டியா பகுதியில்தான் மிகப் பெரிய அளவில் அதிக அளவிலானோர் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் 97 இஸ்லாமியர்கள் இங்கு நடந்த வன்முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள் ஆவர்.
இந்க கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் குஜராத் அமைச்சரும், 3 முறை எம்.எல்.ஏவுமான மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பளித்துள்ளார். அதேபோல முன்னாள் விஎச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது தீர்ப்பின்போது நீதிபதி ஜோத்சனா சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது மாயாவைக் காக்க மோடி அரசு தீவிரமாக முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாயாவைக் காக்க மோடி அரசு பல வழிகளிலும் முயன்றதாக நீதிபதி தனது கருத்தில் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை வழக்கில் மாயாதான் வன்முறைக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டதாகவும் நீதிபதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
2008ம் ஆண்டுதான் மாயா கோத்னானி அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது அவர் மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக பதவி தரப்பட்டார். நரோடா பாட்டியா சம்பவத்தில் பெண்களும், குழந்தைகளும்தான் மிகப் பெரிய அளவில் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி ஜோத்சனா மேலும் கூறுகையில், மாயா கோத்னானிக்கு அப்போதைய விசாரணை அமைப்புகள் அனைத்தும் (அதாவது உச்சநீதிமன்றம் எஸ்ஐடியை அமைப்பதற்கு முன்பு) உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைக் காக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. கோத்னானியின் பெயர் கூட இந்த சம்பவத்தில் வந்து விடாதபடி காக்க கடுமையாக முயன்றுள்ளனர் என்று கூறியுள்ளார் நீதிபதி.
முதலில் நரோடா பாட்டியா சம்பவம் தொடர்பாக குஜராத் மாநில காவல்துறையினர் பதிவு செய்த எப்ஐஆரில் மாயாவின் பெயரே இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அவர் மீது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் புகார் கூறியும் கூட மாயாவின் பெயரை குஜராத் போலீஸார் சேர்க்கவில்லை. அவரை கண்டு கொள்ளாமலேயே இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் தலையீட்டால் சிக்கிய மாயா
அப்போதைய பிரதமர் வாஜ்பாயியை சந்தித்தும் கூட பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புகார் கூறினர். போலீஸார், மாயாவைக் காக்க முயல்வதாக வாஜ்பாயிடமே அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வாஜ்பாய் தலையீட்டின் பேரில், மாயா தொடர்பான 27 புகார்களை குஜராத் போலீஸார் ஏற்றனர். அதன் அடிப்படையில் மாயாவின் பெயரைச் சேர்த்து ஒரு எப்ஐஆரை குஜராத் போலீஸார் பதிவு செய்தனர். அதன் பின்னரே விஎச்பி தலைவர் ஜெய்தீப் படேல், நரோடா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைசூர்வாலா ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.
அதாவது ஒரு முதல்வராக நரேந்திர மோடி செய்யத் தவறியதை வாஜ்பாய் தலையிட்டு செய்யும் நிலையை ஏற்படுத்தி விட்டது அப்போதைய மோடி அரசு.
மாட்டி விட்ட ராகுல் சர்மா
இருப்பினும் கூட தொடர்ந்து மாயாவுக்குச் சாதகமாகவே குஜராத் போலீஸார் நடந்து வந்தனர். எப்ஐஆரில் பெயரைச் சேர்த்த வேகத்திலேயே அந்த வழக்கை மூடி விட்டது குஜராத் அரசு. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த குற்றப் பிரிவு காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா, இந்த மூன்று பேரையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது அவரை உடனே இடமாற்றம் செய்து விட்டது மோடி அரசு. அகமதாபாத்தை விட்டே அவர் தூக்கப்பட்டார்.
இருப்பினும் நரோடா பாட்டியா வழக்கில், மாயா உள்ளிட்டோருக்கு உள்ள தொடர்புகள் அடங்கிய தகவல்களை சிடி மூலம் தன்வசப்படுத்திக் கொண்டு விட்டார் ராகுல் சர்மா. அதன் பின்னர் தான் சேகரித்த அத்தனை தகவல்களையும் அப்படியே நானாவதி கமிஷன் முன்பும், யுசி பானர்ஜி கமிட்டி முன்பும் கொட்டினார் ராகுல் சர்மா. இதன் மூலம் மாயாவின் அக்கிரமச் செயல்கள் அம்பலத்திற்கு வந்தன.
இதையே பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த எஸ்ஐடி சிறப்பு விசாரணைக் குழுவும் முக்கியமாக கவனத்தில் கொண்டது. இந்த சிடி ஆதாரம்தான் மாயாவையும், பஜ்ரங்கி உள்ளிட்டோரையும் சிறையில் தள்ளப் பேருதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment