Wednesday, September 19, 2012

மமதா அதிரடி... பிரதமர், அமைச்சர்களுடன் சோனியா இன்று அவசர ஆலோசனை

 Sonia Meet Top Leaders Discuss Mamata Banerjee Withdraw
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும், அமைச்சர்களை விலக்கிக் கொள்வதாகவும் மமதா பானர்ஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் உள்ளிட்டோருடன் தலைவர் சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
நேற்று இரவு தனது அதிரடி முடிவை அறிவித்தார் மமதா பானர்ஜி. இதனால் காங்கிரஸ் தரப்பில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை என்ற போதிலும் கூட நெருக்கடியான நிலையில் ஆட்சி இருப்பதால் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று காலை 10 மணிக்கு அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். சோனியா காந்தியின் வீட்டில் நடைபெறும் இக்கூட்டத்தி்ல பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அகமது படேலும் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

மமதா பானர்ஜியின் நேற்றைய அதிரடி முடிவால் மத்திய அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. இருப்பினும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் துணையால் ஆட்சி கவிழும் அபாயம் இப்போதைக்கு இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சி தைரியத்துடன்தான் இருக்கிறது.
அதேசமயம், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மமதா சில யோசனைகளையும் தந்துள்ளார், வெள்ளிக்கிழமை வரை அவகாசமும் கொடுத்துள்ளார். இதுகுறித்து சோனியா இன்று முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
மமதா பானர்ஜியின் இந்த 'ஆபர்' குறித்து அவர் பிரதமருடன் தீவிரமாகப் பேசக் கூடும் என்றும், மமதாவின் சில கோரிக்கைகளையாவது ஏற்க வேண்டும் என்று அவர் பிரதமரை வற்புறுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மமதாவின் கோரிக்கைகள்...
- ஏற்றப்பட்ட டீசல் விலையை ரூ. 3 முதல் 4 ஆக குறைக்க வேண்டும்.
- கேஸ் சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை வருடத்திற்கு 12 என உயர்த்த வேண்டும்.
- நேரடி அன்னிய முதலீடுகளை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பது என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும்.
இதுவே மமதா வைத்துள்ள கோரிக்கைகள் ஆகும். இதை பிரதமர் ஏற்பாரா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment