டெல்லி: காவிரி நதிநீர் அலுவலக விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் செயல்படுவம் போக்கை நினைத்தாலே ரத்த கொதிப்புதான் வருது... என்று இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு பிரதமர் அலுவலகம் பற்றி கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழக மக்களின் வாழ்வாதார விவகாரம். தமிழகத்தில் பல்லாயிரம் ஏக்கரிலான குறுவை சாகுபடியே செய்ய முடியாமல் போய் சம்பா சாகுபடியும் நடக்குமா? என்ற கேள்விக்குறியோடு தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசும் காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டுங்கள் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் எப்படியெல்லாம் அலட்சியமாக, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் எப்படியெல்லாம் படுகேவலமாக மெத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வெட்ட வெளிச்சமாக எச்சரிக்கையுடன் கூடிய கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டனர்.
காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்ற போது, ஏன் ஆணையத்தின் தேதியை தீர்மானிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, ரொம்ப கேஷுவலாக, மாநில அரசுகளிடம் தேதி கேட்டிருக்கிறோம்.. இன்னும் அவங்க சொல்லலை என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.
இதில் செம சூடாகிப் போன உச்சநீதிமன்ற நீதிபதிகள், என்ன இது! காவிரி நதிநீர் ஆணையத் தேதியைக் கூட்டக் கூடவா மாநில அரசுகளிடம் தேதியைக் கேட்கிறீர்கள்... பிரதமருக்கு என்ன தேதி வசதியாக இருக்கிறதோ அந்த தேதியில் கூட்டுவார்களா? அல்லது மாநில அரசுகளுக்கு வசதியான தேதியில் ஆணையத்தைக் கூட்டுவீர்களா? உங்களோட நடவடிக்கை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என்று வெளுத்துக் கட்ட வெலவெலத்துப் போனார் மத்திய அரசு வழக்கறிஞர்.
அப்போது தமிழக அரசு சார்பில், பிரதமர் அலுவலகம் காவிரி பிரச்சனையோட சீரியஸ் தெரியாமல் நீர்வளத்துறை அமைச்சகத்தின் யாரோ ஒரு அதிகாரியை வைத்து மாநில முதல்வர்களுக்கு தேதி கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதையும் சுட்டிக்காட்ட கொந்தளித்துப் போயினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கர்நாடக அரசு தன்னோட பதில் மனுவில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா? என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேட்க அவரோ தெரியாது என்று வெலவெலத்தபடியே சொல்ல உச்சகட்ட கோபத்துக்குப் போயினர் நீதிபதிகள்.
" என்ன இது! கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை பிரதமர் அலுவலகம் படிக்கலைன்னு சொல்றது ரொம்ப அதிர்ச்சியா இருக்கிறது. கர்நாடகம் எப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கு தெரியுமா? பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தை பல்லில்லாத ஆணையம்னு சொல்லியிருக்கு! இது கூட தெரியாமல் இருக்கிறீங்க.. இந்த பிரதமர் அலுவலகத்தை நினைச்சாலே ரத்தக் கொதிப்புதான் எங்களுக்கு வருது...எங்களோட கடுமையான ஆட்சேபத்தை தெரிவிக்கிறோம்.. பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளை அழையுங்கள்.. இந்த விவகாரம் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு ஒன்னுமே தெரியலை...அரசியல் சாசனத்தின் உயரிய அமைப்பு பிரதமர் அலுவலகம் என்பதால் வார்த்தைகளை கவனமாகத்தான் பயன்படுத்துகிறோம்" என்று நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெளுவெளுவென மன்மோகன்சிங் அலுவலகத்தை சாத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்!
அத்துடன் விட்டுவிடவில்லை..காவிரி நதிநீர் ஆணையத்துக்கான தேதியை பிரதமர் அலுவலகம் தீர்மானிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே தீர்மானித்து அறிவித்துவிடும் என்று சவால்விட்டு அறிவித்திருக்கின்றனர்.
இதனால் நடுநடுங்கிப் போன மத்திய அரசுதரப்பு வழக்கறிஞர் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்குப் போய் வெள்ளிக்கிழமைக்குள் விவரங்களைத் தருகிறேன் என்று சொல்லி வாய்தா கேட்டிருக்கிறார்.
தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகலம் மெத்தனமாக செயல்பட்டிருப்பதை பொளேரென அம்பலப்படுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்!
No comments:
Post a Comment