சென்னை: ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவருக்கு ஆதரவாக இதுவரை 6.29 லட்சம் ஓட்டுக்கள் திரண்டுள்ளன. அதேசமயம், பாஜக, அதிமுக உள்ளிட்ட நான்கு கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மாவுக்கு வெறும் 3.10 லட்சம் வாக்குகளே சேர்ந்துள்ளன.
காங்கிரஸ் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு இதுவரை 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தக் கட்சிகளின் மூலம் அவருக்கு இதுவரை 6.29 லட்சம் ஓட்டுக்கள் சேர்ந்துள்ளன.
அதேசமயம், பாஜக, அதிமுக, பிஜூ ஜனதாதளம், சிரோண்மணி அகாலிதளம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுள்ள பி.ஏ.சங்மாவுக்கு 3.10 லட்சம் ஓட்டுக்களே இதுவரை சேர்ந்துள்ளன. திரினமூல் காங்கிரஸின் ஆதரவுகிடைத்தாலும் கூட 4 லட்சம் ஓட்டுக்களைக் கூட அவரால் தாண்ட முடியாது.
குடியரசுத் தலைவர் பதவியை அடைய ஒரு வேட்பாளர் குறைந்தது 5.50 லட்சம் ஓட்டுக்களைப் பெற வேண்டும். ஆனால் தற்போது பிரணாப் முகர்ஜி அதையும் தாண்டி போய் விட்டார் என்பதால் அவரது வெற்றி உறுதியாகி விட்டது.
குடியசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் 4896 மக்கள் பிரதிநிதிகள் அதாவது எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 776 பேர் எம்.பிக்கள், 4120 பேர் எம்.எல்.ஏக்கள் ஆவர். இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு 10.98 லட்சமாகும்.
No comments:
Post a Comment