Tuesday, November 29, 2011

குவைத் அரசு ராஜினாமா



kuwait-government
குவைத் சிட்டி:ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து குவைத் அரசு ராஜினாமா செய்துள்ளது.அரசியல் நெருக்கடியை குறித்து விவாதிக்க நடந்த அவசர கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜினாமா கடிதத்தை குவைத் அமீருக்கு அளித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி கூறுகிறது.பிரதமர் ஷேக் நாஸர் அல் முஹம்மது ராஜினாமா செய்யக்கோரி பேரணி நடத்த எதிர்கட்சியினர் தீர்மானித்ததை தொடர்ந்து இந்த அவசர கூட்டம் நடத்தப்பட்டது.
அரசு ராஜினாமா செய்யவேண்டும் என அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தது அரசை நெருக்கடியில் ஆழ்த்தியது.பாராளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த எட்டு எம்.பிக்களுக்கு விசாரணையிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடாது என வலியுறுத்தும் மனுவில் கையெழுத்திட மறுத்த சட்டம் மற்றும் பொதுவிவகாரத்துறை அமைச்சர் முஹம்மது அல் அஃப்ஸி முதன் முதலாக ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அரசு ராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பது எதிர்ப்பாளர்களின் கோரிக்கையாகும். ஆனால், பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்பது தெரியவில்லை. பாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக தகவல் கிடைக்கவில்லை என சபாநாயகர் ஜாஸிம் அல் குராஃபி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நுழைந்த வழக்கில் கைதான 24 பேரின் காவலை மேலும் 21 தினங்களுக்கு நீட்டி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்தது.ஏழு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.ஜஸ்டிஸ் பேலஸிற்கு முன்பாக கைதுச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும், எதிர்கட்சி எம்.பிக்களும் முகாமிட்டுள்ளனர்.சில ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக பணம் கைப்பற்றியது தொடர்பான வழக்கில் விசாரணையை சந்திக்கின்றனர். 

No comments:

Post a Comment