மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்று சொன்ன தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாகப் பேருந்துக் கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அரசு பரிந்துரை செய்துள்ளது. விரைவில் மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக மக்கள் தங்கள் தலையில் சுமக்க வேண்டி வரும்.
பால் விலை, பேருந்துக் கட்டண உயர்வு குறித்துத் தொலைக் காட்சியில் தெரிவித்த தமிழக முதல்வர் 'வழக்கம் போலவே கருணாநிதி ஆட்சியைச் சாடினார்.மேலும் தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தராததாலும் போக்குவரத்துக் கழகச் சொத்துக்கள் வங்கிகளில் அடைமானம் வைக்கப் பட்டுள்ளதாலும் பெருகி வரும் நஷ்டத்தை ஈடு கட்டக் கட்டணங்களை உயர்த்துவதாக விளக்கமும் அளித்துள்ளார் ஜெயலலிதா.
மக்களை வசியப்படுத்த, 'தி மு கவின் தேர்தல் அறிக்கை'யைப் பார்த்துத் தாம் காப்பியடித்த தேர்தல் அறிக்கை வெளியிடும்போது மத்திய அரசின் நிதி கிடைத்தால் இலவசங்கள் தருவேன் என ஜெயலலிதா சொல்லவில்லையே! ஏதோ தம் பையிலிருந்து கொடுப்பதுபோல் அம்மி முதல் ஆட்டுக்குட்டிவரை அள்ளி வழங்குவதாக அறிவித்து விட்டு இப்போது மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை எனப் பழி போடுவது வாக்களித்த மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றுவதாகும். தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு நிதி தருவோம் என மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு வாக்குறுதி ஏதும் கொடுத்திருக்கவில்லையே? பின் ஏன் இந்தத் திசை திருப்பும் நாடகம்?
தி மு க ஆட்சியின் போது பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்குப் பேருந்து உரிமையாளர்கள் பலமுறை முயன்றும் கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் கருணாநிதியைக் குறை சொல்லும் ஜெயலலிதா எண்ணிப்பார்க்க வேண்டும்.
இலவசம் என்ற பெயரில் நாலணாவைத் தந்து விட்டு நம்மிடம் இருந்து அரையனாவைப் பறிக்கும் அரசியல்வாதிகளின் நயவஞ்சகம்தெரியாத அப்பாவிப் பொதுமக்கள் நிலை தான் அந்தோ பரிதாபம். பொது மக்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று காட்டிக் கொண்டு காலையில் ஒரு ரூபாயைத் தந்து விட்டு இரவில் வந்து அந்த ஒரு ரூபாயுடன் நம் பணத்தையும் சேர்த்துக் கொள்ளை அடிக்கும் செயலுக்கு ஒப்பானது இது போன்ற கட்டண உயர்வுகள். இதை முன்னரே நம் தலையங்கத்தில் தெரிவித்து இருந்தோம்.
பொது மக்களுக்கு நன்மை பயக்கவே இலவசத் திட்டங்கள் என்ற நிலை மாறி அமைச்சர்களும் அதிகாரிகளும் கமிசன் பெற்று, சொத்து சேர்க்கவே இலவசத் திட்டங்கள் என்ற கருத்து வலுப் பெற்று வருவதையும் மறுப்பதற்கில்லை.பொது மக்களிடம் கட்டண உயர்வு, டாஸ்மாக் வருமானம் போன்றவைகள் மூலம் கொள்ளை அடித்து அதில் ஒரு பகுதியை மக்களுக்காக பேன், மிக்சி, டி.வி என இலவசமாக வழங்குவது சாதனை இல்லை. பொது மக்களைப் பாதிக்காத வகையில் நல்லாட்சி புரிவதே சாதனை.
பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க, பொறுப்பற்ற அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம் என்ற உண்மையை அரசு எப்போது தான் உணரப் போகின்றதோ தெரிய வில்லை. போக்குவரத்துக் கழகங்களில் டிக்கெட் அச்சிடுவதில் தொடங்கி எரிபொருள் மற்றும் உதிரி பாகங்கள் கொள்முதல் செய்வது வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் அடிக்கப் படும் கமிசன் களை நிறுத்தினாலே இன்னும் பல வருடங்களுக்குப்பேருந்துக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது.
ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதத்தில் மின் வெட்டைச் சரி செய்வோம் என்று வாக்குறுதி அளித்த ஜெயலலிதா மின்வெட்டை அதிகரித்துள்ளாரே தவிர மின்வெட்டை நீக்கிய பாடில்லை. இந்த லட்சணத்தில் அறிவிக்கப் படாத வாக்குறுதியாக கட்டண உயர்வு வேறு. மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் போதெல்லாம் ஒரு சடங்கு போல, ஏழை மக்களைப் பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தும் ஜெயலலிதா தமிழகத்தில் ஏழை மக்களே இல்லை என நினைத்து விட்டாரோ?
பொது மக்களுக்குச் சேவை அளிப்பதே பொதுத் துறை நிறுவனங்களில் நோக்கம், லாபம் சம்பாதிப்பதன்று, இதை முதல்வர் உணர்ந்து திறமையான நேர்மையான அதிகாரிகளையும் செயல்திறனுள்ளஅமைச்சர்களையும் நியமித்து பொதுத் துறை நிறுவனங்களை நஷ்டத்தில் இயங்காமல் கட்டணங்களையும் உயர்த்தாமல் பொது மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்க அரசு முன்வர வேண்டும். இல்லையேல் ஐந்தாண்டுகளுக்குப் பின்எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு அல்லாட வேண்டிய நிலை அதிமுகவுக்கும் வரக் கூடும் என்பதை நினைவுறுத்துகிறோம்.
நன்றி: இந்நேரம்.காம்
No comments:
Post a Comment