Friday, November 18, 2011

பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு


சென்னை:மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மின்சார கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு
“தமிழக அரசு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் கடன் சுமையாலும் நிதி நெருக்கடியாலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடுதல் மின்சாரம் வேண்டும்; மண்ணெண்ணெய் வேண்டும்; மடிக்கணினி வழங்க நிதி வேண்டும்; மீனவர் மேம்பாட்டுக்கு நிதி வேண்டும் என டெல்லி சென்று பிரதமரிடம் மனு அளித்தேன். மனு குறித்து திட்டக்குழு முடிவு எடுக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.
அதே சமயம், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சி ஆளும் மேற்கு வங்க அரசுக்கு  ரூ21,614  கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் அரசுகளை மத்திய அரசு புறக்கணிப்பது தெரிகிறது.
இந்த நிலையில் திவாலாகும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம்  ரூ40,659 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி. மின்சாரம் விற்றவர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்க வேண்டியது 10,000 கோடி. அரசின் மொத்த கடன் ஒரு லட்சத்து ஆயிரத்து 349 கோடியுடன், மின்வாரிய கடன் 53,000 கோடியை ஒப்பிட்டால், வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெரியும். இதற்கு மேலும் வாரியத்திற்கு அளிக்க அரசிடம் பணம் இல்லை.
அத்தியாவசிய தேவைகள் மீது வரலாறு காணாத அட்டாக்
இந்த நிலையில் திவாலாகும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம்  ரூ40,659  கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி. மின்சாரம் விற்றவர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்க வேண்டியது 10,000 கோடி. அரசின் மொத்த கடன் ஒரு லட்சத்து ஆயிரத்து 349 கோடியுடன், மின்வாரிய கடன் 53,000 கோடியை ஒப்பிட்டால், வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெரியும். இதற்கு மேலும் வாரியத்திற்கு அளிக்க அரசிடம் பணம் இல்லை.



இதே போன்றுதான் அரசு போக்குவரத்து கழகங்களின் நிலையும் உள்ளது. டீசல், உதிரி பாகங்கள் வாங்கவும், விபத்து நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்கள் பிடித்து வைத்துள்ள வாகனங்களை விடுவிக்கவும், ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் இயலாத சூழ்நிலையில் போக்குவரத்து கழகங்கள் ஸ்தம்பித்து விட்டன. அவற்றின் சொத்துக்கள் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. டயர், டியூப், உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு
ரூ6,150  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்படும்.
இதே போன்று ஆவின் நிலைமையும் மோசமடைந்துவிட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத நிலையில் ஆவின் உள்ளது. கொள்முதல் செய்யும் ஒவ்வொரு லிட்டருக்கும் நான்கு ரூபாய் அளவுக்கு ஆவின் நஷ்டத்தை சந்திக்கிறது. தனியார் நிறுவனங்களை விட ஆவின் பால் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்களைவிட இடைத்தரகர்கள் அதிக பயன் பெறும் நிலை ஏற்பட்டு விட்டது. இந்த சூழ்நிலை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப சில முடிவுகளை எடுத்திருக்கிறேன்.” என்றார்.
மின்சாரம்: 
மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. மின்சார வாரியமே ஆய்வு செய்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்து, அந்த ஆணையம் மக்களின் கருத்தை கேட்டறிந்து மின்கட்டணத்தை நிர்ணயம் செய்யும். இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும். வாரியத்துக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதல் பங்கு மூலதனமாக எனது அரசு வழங்கும்.
போக்குவரத்து: 
சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 28 பைசா என்பது 42 பைசா ஆகவும்; விரைவு மற்றும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 32 பைசா என்பது 56 பைசா ஆகவும்; சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 38 பைசா என்பது 60 பைசா ஆகவும்; அல்ட்ரா டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 52 பைசா என்பது 70 பைசா ஆகவும் உயர்த்தி வசூலிக்கப்படும்.
பால்: 
தமிழ்நாட்டில் தினமும் 150 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. அதில் 22 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு அதிக கொள்முதல் விலை கொடுக்கும்போது, ஆவின் குறைவாக கொடுப்பது நியாயமல்ல. எனவே, பசும்பால் கொள்முதல் விலை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலை 26 லிருந்து 28 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.

ஆவின் அட்டைதாரர்களுக்கு சமன்படுத்திய பால் விலை லிட்டருக்கு 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.  எத்தனை முறை கேட்டாலும் தமிழ்நாட்டுக்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும்போது, தமிழக மக்களிடம் வராமல் வேறு யாரிடம் நான் உதவி கேட்க முடியும்? எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment